Our Feeds


Saturday, March 9, 2024

ShortNews Admin

அம்பானி மகன் திருமணத்தில் சமைத்து அசத்திய இலங்கை சமையல் கலைஞர்கள் - வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்.



இந்தியாவின் முதன்மை கோடீஸ்வர தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன், ஆனந்த் அம்பானியின் திருமண வரவேற்பு விழாவுக்கு உணவு தயாரிப்பதற்காக இலங்கையில் இருந்து சென்ற 13 சமையல் கலைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.


நேற்றுமுன்தினம் அவர்கள் 13 பேரும் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.


முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.


இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளது.


உணவுகளை நவீன முறைகளில் தயாரித்துப் பரிமாறியுள்ளனர்


இந்நிலையில் திருமணத்திற்கு முன்னரான வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகி வரை 3 நாட்கள் நடந்தது.


இந்த வரவேற்பு நிகழ்வில் 2500 சமையல் கலைஞர்கள் சமையல் செய்ய உலகம் முழுவதும் இருந்து அழைக்கப்பட்டிருந்தனர்.


கொழும்பில் உள்ள சிட்ரஸ் (Citrus) ஹோட்டல் குழுமத்தையும் “சிலோன் கேரி கிளப்” (Ceylon Curry Club) உணவகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமையல் கலைஞர்கள் சென்றிருந்தனர்.


இந்த 13 சமையல்காரர்களும் தங்களது உணவகங்களில் இலங்கை உணவுகளை நவீன முறைகளில் தயாரித்துப் பரிமாறியுள்ளனர்.


இரவு உணவை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் வழங்கப்பட்டது


இவர்களின் உணவுகளை உட்கொண்ட வாடிக்கையாளர்கள் கூறிய கருத்துக்கள், கூகுள் மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த 13 பேரும் அம்பானி வீட்டு விசேஷத்தில் சமைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.


இவர்களுக்கு கடந்த மார்ச் 3 ஆம் திகதியன்று திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு மதிய உணவு தயாரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.


அவர்கள் தயாரித்த உணவுக்கு விருந்தினர்களிடம் இருந்து கிடைத்த பதில் மற்றும் பாராட்டுக்களின் அடிப்படையில், அவர்களுக்கு மார்ச் 3 மற்றும் 4 ஆம் திகதிகளிள் இரவு உணவை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் வழங்கப்பட்டது.


இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் உள்ள அம்பானிக்கு சொந்தமான தனியார் உயிரியல் பூங்காவிலேயே இந்தத் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது.


இந்த திருமண விழாவிற்கு இலங்கை சமையல் கலைஞர்கள் தவிர இங்கிலாந்து, துபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »