ஐஸ்லாந்தின் கிரிண்டவிக் நகரின் அருகேயுள்ள எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் இருந்த நிலையில் நேற்று(17) வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து வெளிப்படும் எரிமலை குழம்பு நாலாபுறமும் வழிந்தோடுவதுடன், எரிமலையில் இருந்து வெளிப்பட்ட புகை விண்ணை முட்டும் அளவுக்கு பரவியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் 4ஆவது முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்திலுள்ள இரண்டு மலைகளுக்கு இடையில் சுமார் 3 கிலோ மீற்றர் நீளத்துக்கு பூமியில் பிளவு ஏற்பட்டதாக ஐஸ்லாந்தின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்புக்கு முன்னதாக வானிலை மையம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முக்கிய சுற்றுலா தலமான ப்ளூ லகூன் தெர்மல் ஸ்பாவில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
எரிமலை வெடித்த பகுதியானது, கிரிண்டாவிக் நகரின் வடகிழக்கே சில கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ளது. ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக்கிலிருந்து தென்மேற்கே 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் உள்ள கடற்கரை நகரமான கிரிண்டாவிக்கில் 3,800 மக்கள் வசிக்கின்றனர். ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம் எரிமலையின் ஆரம்பகட்ட வெடிப்புக்கான அறிகுறி தோன்றியபோது, இம்மக்கள் வெளியேற்றப்பட்டிருப்பினும், வீடுகளுக்குத் திரும்பிய சிலர் நேற்று மீண்டும் வெளியேற்றப்பட்டனர்.