ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வட்டவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கர்ப்பிணியான ஆசிரியைக்கு வளைகாப்பு செய்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் மிகவும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் பாடசாலை அதிபர் இதற்கு உடந்தையாக செயற்பட்டதாகவும் விமர்ச்சிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், பாடசாலை நேரத்தில் இலங்கை பாடகி அசானியை அழைத்து, கடந்த மாதம் நிகழ்ச்சியொன்றினையும் நடாத்தியிருந்திருக்கின்றார்கள் எனவும் அறியமுடிந்தது.
பாடசாலை நேரத்தில் பாடசாலை கட்டிடம் பயன்பாடு
அடிக்கடி இவ்வாறான வெளி வேலைகளுக்கு பாடசாலை நேரத்தில் பாடசாலை கட்டிடம் பயன்படுத்தப் படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாகவும் வலயகல்வி பணிமனையில் முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளது.
வளைகாப்பு குறித்து அதிபர் கருத்து...
பாடசாலையில் இடம்பெற்ற வளைகாப்பு தொடர்பாக அதிபர் அன்பழகன் தெரிவிக்கையில்,
“எமது பாடசாலை, அழகிய இயற்கை சூழலை கொண்டமைந்த ஒரு பாடசாலையாகும். இந்த பாடசாலையில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது பற்றி பேசாதவர்கள் இன்று இந்த விடயத்தை பெரிதாக பேசுகின்றார்கள் என தெரிவித்தார்.
பாடசாலையில் கர்ப்பிணி ஆசிரியைக்கு இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெற்றமை உண்மை தான். ஆனால், அது வளைகாப்பு என்ற தோரணையில் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக அவர் கடந்த 6ஆம் திகதியுடன் பாடசாலையில் இருந்து விடைபெற்று செல்வதால் அவருக்கு ஒரு நேர உணவளித்து சந்தோசமாக வழியனுப்பி வைத்தோம்.
பாடசாலையில் அந்த நிகழ்வை செய்த போதிலும் பாடசாலை கற்றல் நேரத்தில் நாம் அதை செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாடசாலை மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. வட்டவளை நகரிலிருந்து சுமார் 9 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்கள் மிகவும் சிரமத்துடனேயே வருகை தருகின்றனர்.
வெளியில் சென்று இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்ள நேரம் போதாத காரணத்தால் நாம் இதை பாடசாலையிலேயே செய்யும் சூழல் ஏற்பட்டது.
மேலும், எமது பாடசாலையில் இவ்வாறானதொரு நிகழ்வு செய்திருக்க கூடாது. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் விசாரணைகளை முகம்கொடுக்க நான் தளாராகவுள்ளேன். என தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலையத்தின் கருத்து
👉 ஒரு பாடசாலையில் இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கமுடியுமா?
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட இவ்வாறான நிகழ்வுகளை பாடசாலைகளில் அனுமதிக்கமுடியாது. எனவே, இந்த செயற்பாட்டை ஹட்டன் கல்வி வலையம் வன்மையாக கண்டிக்கின்றது.
எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், பாடசாலை கற்றல் நேரம் வீணடிக்கப்பட்டிருக்கின்றது. பாடசாலை நேரங்களில் கற்றல் கற்பித்தலுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
பிற செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி: ஒருவன் தளம்