Our Feeds


Tuesday, March 19, 2024

ShortNews Admin

கிழக்கின் முழுமையான அபிவிருத்தியின் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும்..!


 ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், கிழக்கு மாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள வளங்கள் தொடர்பில் நாம் தற்போது கண்டறிந்துள்ளோம். உதாரணமாக இறால் வளர்ப்பு, கனிய வளங்கள், துறைமுகம், விமான நிலையம், நீர் வளம், சுற்றுலாத் துறை மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை எவ்வாறு நாம் அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். எனவே இவற்றை மேம்படுத்துவதன் மூலம் எமது நாட்டின் கடன்களை அடைப்பதற்கு கிழக்கு மாகாணம் மாத்திரம் போதுமானது என்பதைக் கூற வேண்டும்.


அந்தளவு வளங்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றன. அவற்றை முறையாக அபிவிருத்தி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் திருப்பி செலுத்தும்போது கிழக்கு மாகாணம் அதற்கு நிதிப் பங்களிப்பை வழங்க முடியும் என்று நான் நினைக்கின்றேன்.


எதிர்காலத்தில் முழு நாட்டுக்கும் பொருளாதார பங்களிப்பை வழங்கும் முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.


மேலும் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையைப் பொருத்தவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்காக பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன.


பொதுவாக இரண்டு வருடங்களில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே ஒரு வருடம் தாமதமாகி உள்ளது. இதற்காக நாம் சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளோம். தற்போது பெருந்தோட்டக் கம்பனிகள் அவர்களின் முன்மொழிவுகளை வழங்கியுள்ளன. பெருந்தோட்டத் தொழில் என்பது அந்நியச் செலாவணியுடன் தொடர்புபட்டது. எனவே டொலரின் பெறுமதி அதிகரிப்பிற்கு ஏற்பவும் உள்நாட்டு வாழ்க்கை செலவினைப் பொருத்துமே சம்பளம் தீர்மானிக்கப்பட வேண்டும். விரைவில் மலையக மக்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.


எதிர்காலத்தில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற முடியாது. தற்போதுள்ள வரி விதிப்புகள் அனைத்தும் ஜனாதிபதி விரும்பி ஏற்படுத்தியவை அல்ல. மாறாக சர்வதேச நாணய நிதியம் எமது நாடு பொருளாதார ரீதியில் மீண்டு வருவதற்காக இட்ட நிபந்தனைகளாகும்.


இன்னும் ஒரு வருடத்திற்குள் எமது நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கே முயற்சி எடுத்து வருகின்றார். ஜனாதிபதி பதவி என்றால் என்ன என்பதையே தெரியாத ஒருவருக்கு நாட்டைப் பொறுப்பளித்தால், அதனைப் பற்றி அறிந்துகொள்ளவே அவர்களுக்கு இரண்டு மூன்று வருடங்களாகும். அதற்குள் மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி எமது நாடு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.


நாம் ஏற்கனவே பல தேர்தல்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டவர்கள். ஆனாலும் தற்போது அவரைத் தவிர வேறு எவரும் இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடியவர் இல்லை. எனவே நாம் தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.” என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »