செவிப்புலன் வலுவற்றோர் தேர்தல் காலப் பகுதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இதற்குத் தீர்வு காணும் நோக்கிலேயே தேர்தல் ஆணைக்குழு மற்றும் இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த அகராதியினை வெளியிட்டுள்ளன.
அனைவரையும் உள்ளடக்கிய வகையில் தேர்தலை நடத்துவதற்கான முதலாவது அடித்தளமாகவே இந்த சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சுமார் நான்கு இலட்சம் செவிப்புலன் வலுவற்றோர் வாழ்வதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்குத் தேவையான தேர்தல் சொற்பதங்களுக்கான உரிய குறியீடுகள் மற்றும் நியமன வடிவிலான வரைவிலக்கணங்கள் இல்லாமையினால் வாக்குச்சாவடிகளில் செவிப்புலன் வலுவற்றோர் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவது இனங்காணப்பட்டுள்ளது.
இதனைத் தீர்க்கும் நோக்கில் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஸ்தாபனத்தின் ஆதரவுடன் தேர்தல் ஆணைக்குழு, இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம், தேர்தல் முறைகளுக்கான சர்வதேச ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த அகராதியினை தயாரிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தன.
இதற்காக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான சைகை மொழிப் பயிற்சியில் தேர்தல் ஆணைகுழுவின் 93 அதிகாரிகள், 59 செவிப்புலன் வலுவற்ற நபர்கள் மற்றும் 26 சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இவர்கள் மீளவும் தமது பிரதேசங்களுக்குச் சென்று, அங்கேயுள்ள தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் செவிப்புலன் வலுவற்ற சமூகத்தினருக்கு சைகை மொழிப் பயிற்சியினை நடத்துவதற்கு ஏற்ற வகையிலேயே இங்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, தேர்தல் ஆணைக்குழு மற்றும் இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம் ஆகியன இணைந்து நாடளாவிய ரீதியில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின.
இதன் விளைவாக ஒரு விரிவான தேர்தல் சைகை மொழி அகாராதியொன்று உருவாக்கப்பட்டது. இந்த
அகராதியானது 324 முக்கிய தேர்தல் சொற்பதங்களை இலங்கை சைகை மொழி மற்றும் இலங்கை தமிழ் சைகை மொழி உட்பட ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கின்றது.
இந்த சொற்பதற்களுக்கான சைகைகள் தெளிவான மற்றும் அணுகக்கூடிய தகவல் தொடர்புக்காக காணொளி மற்றும் புகைப்பட வடிவங்களில் காணப்படுகின்றன.
“நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றி எதுவுமில்லை” என்ற கோட்பாட்டின் வழியில் இந்த அகராதி தயாரிப்புக் குழுவின் பெரும்பான்மையான அங்கத்தவர்களாக இயலாமையுடைய நபர்களே காணப்பட்டனர்.
“நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றி எதுவுமில்லை” என்பது இயலாமையுடையவர்களினால், இயலாமையுடையவர்களுக்கான வாய்ப்புகளின் முழுப் பங்கேற்பையும், சமத்துவத்தையும் அடைவதற்கான உலகளாவிய இயக்கத்தின் குறிகோளாகும்.
இதேவேளை, புதிய அகராதி மற்றும் தேர்தல் குறியீடுகள் பற்றிய பரவலான விழிப்புணர்வினை மேற்கொள்ள நாடளாவிய ரீதியில் ஐந்து பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சிகள் செவிப்புலன் வலுவற்றோர் சமூகம், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரை இலக்கு வைத்து நடத்தப்படவுள்ளன.
செவிப்புலன் வலுவற்ற மற்றும் செவிப்புலன் தன்மை குறைவான பிரஜைகளுக்கான உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தேர்தல்களை உறுதி செய்வதில் இலங்கையின் புதிய தேர்தல் சைகை மொழி அகராதியின் வெளியீடானது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைத் குறிக்கின்றது.
இதேவேளை, ENGAGE என்று அழைக்கப்படும் Engaging a New Generation for Accessible and Election எனும் விசேட பயிற்சிநெறியில் பங்குபற்றிய 2024ஆம் ஆண்டின் மாணவர் பிரிவின் நிறைவும் இந்த நிகழ்வில் கொண்டாடப்பட்டது.
களனிப் பல்கலைக்கழகத்தின் Inclusivity Center உடன் இணைந்து தேர்தல் முறைகளுக்கான சர்வதேச ஒன்றியம் இந்த விசேட பயிற்சி நெறியினை ஏற்பாடு செய்திருந்தது.
ஜனநாயக செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபடுவதற்கும் மற்றும் உள்ளடக்கிய ஆட்சி மற்றும் தேர்தல்களுக்காகப் பரிந்துரைப்பதற்கும் 20 இயலாமையுடைய இளம் தலைவர்களுக்கு அறிவு, திறன்கள் மற்றும் வளங்களைக்கொண்ட 10 நாள் பயிற்சி இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, “இலங்கை தேர்தல் முறையில் சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டமை பாரியதொரு வெற்றியாகும்” என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
இது ஓர் ஆரம்பமேயாகும். தேர்தலின் போது செவிப்புலன் வலுவற்றோர் எதிர்நோக்கும் தடைகளை அகற்றுவது எங்களது கடமையாகும் என அவர் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்களது வாக்குரிமை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த அகராதி வெளியிடப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் நாயகம் கூறினார்.
இதேவேளை, விழிப்புணர்வற்றோர் வாக்களிப்பதற்காக தொட்டு உணரக்கூடிய வாக்குச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.