மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட திகிலிவெட்டை பகுதியில் இன்று அதிகாலை (17) யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திகிலிவெட்டை, குளத்துவெட்டையை சேர்ந்த நாகராசா முரளிதரன் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையென தெரியவந்துள்ளது.
நண்பர் ஒருவருடன் மீன்பிடிக்கச் சென்று அதிகாலை வேளை குளத்தின் ஓரமாக நின்ற மரத்தின் கீழ் படுத்துறங்கியபோது யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானையின் தாக்குதல்களால் விவசாயிகள், பண்ணையாளர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
இந்நிலையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவு ஈரளக்குளத்தில் நேற்று (16) இரவு யானை தாக்குதலுக்குள்ளான ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (17) அதிகாலை கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்
நேற்றும் இன்றும் அடுத்தடுத்து இரு தினங்களில் யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.