கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதியை , வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் சத்திரசிகிச்சையின் மூலம் குணமடைந்த சிறுமியொருவர் வரவேற்றது விசேட அம்சமாகும்.
இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் நாள்பட்ட கல்லீரல் நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கல்லீரல் செயலிழப்புக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே பயனுள்ள சிகிச்சையாகும். இந்த சிக்கலான கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைக்கு விசேட அறிவு மற்றும் விலையுயர்ந்த உபகரணங்கள் அவசியம்.
கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்வது ஒரு நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பின் வளர்ச்சியின் குறிகாட்டியாகும். பட்டப்பின்படிப்பு பயிற்சி மையமாகவும் வடகொழும்பு கல்லீரல் நோய்களுக்கான மையம் செயற்படுவதோடு கல்லீரல் நோய்களில் உயர்தர ஆராய்ச்சியை நடத்தி இலங்கையில் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையின் மிகப்பெரிய தரவுத்தளத்தை பேணுகிறது.
இந்த கல்லீரல் நோய் விசேட சிகிச்சை நிலையத்தை நிர்மாணிப்பதற்காக எம். எச். ஓமார் நிதியம் இரண்டரை பில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது இலங்கையின் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளுக்கு இலங்கையில் தொழில்முனைவோர் வழங்கிய மிகப்பெரிய நன்கொடையாகும் .எம். எச். ஓமார் இந்த நாட்டில் புகழ்பெற்ற பிராண்டிக்ஸ் குழுமத்தின் ஸ்தாபகர் ஆவார்.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து எம். எச்.ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதன் வசதிகளை அவதானிக்கவும் இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட அதிதிகளின் நினைவுப் புத்தகத்தில் குறிப்பு ஒன்றையும் இட்டார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
ஓமார் குடும்பத்தினர் வழங்கிய தனித்துவமான நன்கொடை மற்றும் பிராண்டிக்ஸ் வர்த்தகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார்.
கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகளுக்கு பிராந்தியத்தில் சிறந்த நாடாக இன்று இலங்கை மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த குழு நாட்டிற்கு வழங்கிய நற்பெயருக்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இந்நாட்டில் சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி இங்கு கருத்துத் தெரிவித்தார்.
சிசு இறப்பு மற்றும் தாய் இறப்பு விகிதங்களின் அடிப்படையில் நமது நாடு புள்ளிவிபர அடிப்படையில் சிறந்த நிலையில் உள்ளது என்றும், கொவிட் தொற்றுநோய் காலத்திலும் அதைத் தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடி காலத்திலும் இலங்கை வலுவாக முன்னேற முடிந்ததாக இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் இந்த வசதிகளுக்காக 2.5 பில்லியன் ரூபா பெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய எம்.எச்.ஓமார் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் நன்றிகளை தெரிவித்தார்.
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், எம். எச். ஓமாரின் பேரனும் பிராண்டிக்ஸ் குழுமத்தின் பணிப்பாளருமான ஹாசிப் ஓமார், களனிப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நிலாந்தி டி சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் பி. ஜி. மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர, சுகாதார அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.