வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி வாகனப் பேரணியுடன், மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆணைக்குழுவில் நிறைவேற்று அதிகாரிகள் எவரும் கடமையில் இருக்கவில்லை. கடமையில் இருந்த அலுவலர்களும் மக்களுடன் கலந்துரையாடுவதை தவிர்த்தனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஒரு மணிநேரத்தின் பின்னர் அலுவலர்கள் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன், நாளைய தினம் சிறைச்சாலைக்கு சென்று தடுப்பில் உள்ளவர்களை நேரடியாக பார்வையிடுவதாக உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையை நோக்கி மக்கள் பேரணி- திடீரென குவிக்கப்பட்ட கலகமடக்கும் பொலிஸார்
வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம் நோக்கி ஆரம்பமாகியுள்ள எழுச்சி போராட்டத்தை தடுக்கும் வகையில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அச்சநிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெடுக்குநாறி மலையை நோக்கி மக்கள் பேரணி - உண்ணாவிரம் இருப்பவர்களின் நிலையும் கவலைக்கிடம்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி வாகனப் பேரணியும், மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்றும் இன்று சனிக்கிழமை நடைப்பெற்று வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தொடச்சியாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின்பேரில் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த வாகன பேரணி வவுனியா நகரை வந்தடைந்தது.
வவுனியா நகரில் ஒன்றுகூடிய மக்கள் வெடுக்குநாறி மலைக்கு பேரணியாக சென்றுள்ளனர்.
இதேவேளை, கைதானவர்களில் ஐந்து பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர். உண்ணாவிரதம் இருக்கும் வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உட்பட ஐவரின் உடல்நிலை மோசமடைகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் உடனடியாக விடுதலை செய்க்கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மகா சிவராத்திரியன்று இடம்பெற்ற பூஜை வழிகாடுகளை பொலிஸார் தடுக்க முற்பட்டபேதாது அதற்கு எதிராக போராடியவர்களில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.