Our Feeds


Thursday, March 28, 2024

News Editor

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது - ஜனாதிபதி


 கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை”யை மக்களின் பாவனைக்காக இன்று (27) திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

முன்னர், நமது மருத்துவர்களுக்கு மலேரியாவுக்கு எதிராக போராட வேண்டியிருந்தது. ஆனால் தற்போது முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், பல்வேறு நோய்கள் ஏற்படுவதாலும் சுகாதாரத் துறையின் சவால்கள் அதிகரித்துள்ளன. எனவே, சுகாதார சேவை அதற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.

மேலும், இந்த நாட்டில் கல்வி முறையும் மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும். இதுவரை, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான மூலதனச் செலவு குறைவாகவே ஒதுக்கப்பட்டது. முன்னர் சுகாதாரம் மற்றும் கல்விக்கு போதுமான பணம் செலவிடப்படவில்லை. யுத்தத்திற்கு பெருமளவு பணம் ஒதுக்க வேண்டியேற்பட்டதே அதற்குக் காரணம்.

கடந்த காலத்தில் அதிக அளவில் கடன் வாங்க நேரிட்டதால், எங்கள் வருமானத்தில் 50% கடன் மற்றும் வட்டிக்காகச் செலவிடப்படுகிறது. இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 07 டிரில்லியனுக்கும் மேல் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 3.9 டிரில்லியன் கடனை திருப்பிச் செலுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு கடனைத் திருப்பி செலுத்தவும், மூன்றில் இரண்டு பங்கு வட்டியைச் செலுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 1.2 டிரில்லியன் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. மூலதனச் செலவுகளை ஒதுக்கிய பின்னர், மிகக் குறைவான தொகையே எஞ்சுகிறது. நீர்ப்பாசனம் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு நாம் தொடர்ந்து பயணிக்க முடியாது. அதனால்தான் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவை உடனடியாக மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுக்குமாறு எங்களுக்குத் தெரிவித்தன. இந்த ஆண்டுக்கான செலவினங்களுக்குத் தேவையான பணத்தை நாட்டிற்குள் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் முதல் முடிவாகும்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் இது முக்கியமான முடிவாகும். எக்காரணத்திற்காகவும் இனி பணம் அச்சிட முடியாது. மேலும், அரசு வங்கிகளில் பணம் பெற முடியாது. நாட்டிற்குள் இருந்து தேவையான வருமானத்தை ஈட்டிக்கொண்டு, முன்னேற வேண்டும்.

இதில் எமக்கிருந்த ஒரே வழி வரியை உயர்த்துவதுதான்.இதற்காக அனைவரும் எங்களைக் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இந்த நடவடிக்கையால், முதல் முறையாக வரவு செலவுத்திட்டத்திற்காக பணத்தை அச்சிட வேண்டிய தேவை ஏற்படவில்லை. அனைவரும் எதிர்கொள்ளும் சிரமங்களை நாம் அறிவோம். ஆனால் வரி அதிகரிப்பால் இன்று வரவு செலவுத் திட்டத்திற்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. அதன் பெறுபேறுகளை இன்று நாட்டில் காணமுடிகிறது. டொலருக்கு நிகராக 370 ரூபாவாக இருந்த ரூபாயின் பெறுமதி, தற்போது 300இற்கும் குறைவாக சரிந்து, ரூபா வலுப்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் மேலும் ரூபா வலுவடையும்.

தொழிற்துறை வளர்ச்சியால் நாடு முன்னேற்றமடையும். கஷ்டமாக இருந்தாலும், எடுத்த தீர்மானங்களினால் நாடு இன்று பலனடைந்துள்ளது. மேலும், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளோம். குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம். இதனுடன் தனியார் துறையிலும் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்தால், அடுத்த 02 வருடங்களில் நாம் செலுத்த வேண்டிய கடன் தொகை படிப்படியாக குறையும். அந்த பணத்தை நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தலாம்.

இன்று இலங்கையில் மாத்திரமன்றி ஐக்கிய இராச்சியத்திலும் எமது மருத்துவத் துறையினரால் சுகாதார முறைமை இயங்கி வருகின்றது. எனவே, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைக்கு தேவையான பணத்தை நாமே உருவாக்கி அந்த துறைகளில் துரித முன்னேற்றத்தை ஏற்படுத்துவோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »