Our Feeds


Wednesday, March 27, 2024

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல் – இந்தியாவே பின்னணி : மைத்ரி பரபரப்பு வாக்குமூலம்



இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு

தினத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத்துறையும் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தமக்கு தெரிவித்ததாக ‘தமிழன்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


 


ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதலில் தொடர் புடையவர்களை தமக்கு தெரியும் என மைத்ரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அழைப்புக்கமைய அவர் நேற்றுமுன்தினம் சி.ஐ.டி சென்றார். அதன்போது சுமார் 06 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.


 


மைத்ரியின் இந்த வாக்குமூலப் பிரதியை அன்றையதினமே சட்ட மா அதிபர் பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளதாக அறியமுடிந்தது.


 


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரி, அதுதொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறியுள்ளதாக அறியமுடிந்தது. எவ்வாறாயினும், அந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் மாத்திரமே வழங்கமுடியுமென்று மைத்ரி தெரிவித்துள்ளதாகவும் நம்பகரமாக தெரியவந்தது.


 


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்த காலகட்டத்தில் இலங்கை தேர்தலை எதிர்நோக்கியிருந்ததால் அரசியலை மையப்படுத்தி உளவு அமைப்புகளால் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டதாகவும் தனக்கு முன்னர் அறியக்கிடைத்ததாக மைத்ரி மேலும் கூறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.


 


(மைத்ரிபால சிறிசேனவின் வாக்குமூலம் குறித்தான மேலதிக தகவல்களை தேசிய பாதுகாப்பு நலன்கருதி முழுமையாக தர முடியாத நிலைமை உள்ளதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.)


 


மைத்ரிபால சிறிசேனவின் இந்த தகவல் தொடர்பில் இலங்கையின் முன்னாள் புலனாய்வு மற்றும் படைத்துறை அதிகாரிகளிடம் விசாரணையை நடத்துவதா என்பது தொடர்பில் பாதுகாப்புத்துறை மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாக மேலும் தெரியவந்தது.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »