Our Feeds


Wednesday, March 27, 2024

News Editor

பொலிஸார் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி


 நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பணத்தை கொள்ளையிட  வந்த மூவரில் ஒருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பிள் ரக அலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ருவன்வெல்ல பிரதேசத்துக்கு அலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த குழுவொன்று, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவித்து, பொலிஸ் அதிகாரிகளுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடத்திற்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும் கூரிய ஆயுதங்களால் அவர்களது காரை தாக்கியுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, ​​பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், அலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »