Our Feeds


Saturday, March 16, 2024

ShortNews Admin

திடீரென சந்தித்துக் கொண்ட சஜித், சந்திரிக்கா - நடந்தது என்ன?



நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடக்கும் என்பது தொியாத ஒரு பின்னணியில் அரசியல் கூட்டணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.


பிரதான எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியும் மற்றும் உதிரிகளாகச் செயற்படும் அரசியல்வாதிகளும் மற்றும் பல பிரமுகா்களும் அரசியல் அணிகளில் இணைந்து செயற்படும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நிகழ்வொன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


இருவரும் உரையாடிய விடயங்கள் ஊடகங்களில் இதுவரை கசியவில்லை. ஆனாலும் சமகால அரசியல் நிலைமைகள் பற்றியே உரையாடியதாக அவர்களுக்கு நெருக்கமானவா்கள் கூறுகின்றனா்.


இந்நிலையில் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து சந்திரிகா புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்போகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


அதேநேரம், சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணிக்கு சந்திரிக்கா தனிப்பட்ட முறையில் அதரவு வழங்குவாரா என்ற கேள்விகளும் எழுகின்றன.


எவ்வாறாயினும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பது தொடர்பாகத் தாம் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லையென சந்திரிகா அண்மையில் தெரிவித்திருந்தமையும் அவதானிக்க வேண்டும்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலரை ஆதரவளிப்பதற்கு தாம் முன்வந்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் சந்திரிகாவின் அலுவலகம் உறுதிப்படுத்தியிருந்தது.


இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கும் தாம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக அண்மையில் செயற் குழு கூட்டம் இடம்பெற்றது.


ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரான சந்திரிகா பண்டாரநாயக்க அந்த கட்சியினை மீள கட்டியெழுப்பும் நோக்குடன் கட்சியை மையப்படுத்திய புதிய அரசாங்கத்தை அமைப்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக கூறப்பட்டது.


இவ்வாறிருக்க தாம் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதுவரை எந்தவாரு அரசியல் கூட்டணியுடனும் சேராத நிலையில் சந்திரிகா பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசவை சந்தித்திருக்கின்றமை மற்றொரு புதிய அரசியல் கூட்டணிக்கு வழிவகுக்குமா என சந்தேகிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »