வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் இரவு வழிபாட்டில் ஈடுபடக்கூடாது, பக்தர்கள் அனைவரும் ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டுமென நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்து, அங்கு தொடர்ந்து சிவ வழிபாட்டில் ஈடுபடப் போவதாக பக்தர்கள் தெரிவித்ததால், இரு தரப்புக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
வவுனியா நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிவராத்திரி தினமான இன்று சைவர்கள், நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
பௌத்தர்களின் வழிபாட்டிடத்தை தமிழர்கள் கைப்பற்றப் போகிறார்கள், சிங்களவர்கள் திரண்டு வர வேண்டுமென கல்கமுவ சாந்தபோதி தேரர் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதை காரணம் காட்டி, இனமுறுகல் ஏற்படும் அபாயமுள்ளதால் சிவராத்திரி வழிபாட்டுக்கு தடைவிதிக்க வேண்டுமென நெடுங்கேணி பொலிசார், வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
நேற்று வழிபாட்டு முன்னாயத்தங்களில் ஈடுபட்ட ஆலய பூசகரும் மற்றொருவரும் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று ஆதிசிவன் கோயிலுக்கு சென்ற பக்கதர்களை பொலிசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சாந்தபோதி தேரர் தலைமையில் வந்த குழுவினரும் தடுக்கப்பட்டனர்.
நீண்ட இழுபறியின் பின்னர், ஆதிசிவன் பக்தர்கள் கால்நடையாக மட்டும் ஆலயத்துக்கு செல்லலாம் என பொலிசார் கெடுபிடி விதித்தனர். இதனால் ஆலயத்துக்கு சென்றவர்களுக்கான குடிநீருக்கும் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் தோளில் காவி தண்ணீர் மேலே எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிலைமையில், மாலை 6 மணிக்கு பின்னர் கோயில் சூழலில் யாரும் நிற்க முடியாது, அனைவரும் கோயிலை விட்டு வெளியேற வேண்டுமென பொலிசார் உத்தரவிட்டனர். ஆனால் பக்தர்கள் அதை ஏற்கவில்லை. சிவராத்திரி வழிபாடு இரவு நேரத்திலும் செய்வது, எமது வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது, தொல்பொருள் சட்டத்தில் இரவு நேரத்தில் இங்கு தங்க முடியாது என கூறப்பட்டுள்ளதா என பக்தர்கள் கேள்வியெழுப்பினர்.
எனினும், பொலிசார் அதை ஏற்காததால் அங்கு கொந்தளிப்பான நிலைமையேற்பட்டது. பொலிசார் பலப்பிரயோகம் மேற்கொண்டு அங்கிருந்து பக்தர்களை வெளியேற்ற முயன்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கோயிலை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்து சுமார் 50 பக்தர்கள் கோயிக்குள் சென்று, ஓம் நமசிவாய என மந்திரம் உச்சரித்தபடியுள்ளனர்.
இந்த கொந்தளிப்பான சூழலில் வழிபாட்டிடத்தில் பொலிசார் பாதணிகளுடன் நடமாடியதும் பக்தர்களை கொந்தளிக்க செய்தது.
கோயிலில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.