Our Feeds


Thursday, March 21, 2024

SHAHNI RAMEES

முஸ்லிம் மக்கள் "கத்னா" செய்வதை தடைசெய்யவில்லை.. - தேசிய மக்கள் சக்தி விளக்கம்

 

தேசிய மக்கள் சக்தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளியீட்டில் பெண்கள் மற்றும் ஆண்களின் பாலுறுப்புத் தொடர்பான விருத்தசேதனம் செய்தல் தொடர்பில் பாதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்ற விடயங்கள் தொடர்பில் திருத்தயமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் முஸ்லிம் மக்கள் சுன்னத் மற்றும் கத்னா செய்வதை தடைசெய்வோம் என குறிப்பிடவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று புதன்கிழமை (20) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சீதனம், விருத்தசேதனம் போன்ற நடைமுறைகள் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் பாதிப்புறுவதை, துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுப்பதற்கான சட்டங்களை தேசிய மக்கள் சக்தி உருவாக்குவது பற்றிய விடயங்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவந்தன அதில் முஸ்லிம் மக்கள் சுன்னத் மற்றும் கத்னா செய்வதை தடுத்து நிறுத்தப்போதாகவும் குறிப்பிடப்பட்டன.


அது பெண்களின் சமவாயத்திலும், தேசிய மக்கள் சக்தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளியீட்டிலும் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு வாக்கியம்.


அது பொய்யான விடயமல்ல. அதில் பெண்கள் மற்றும் ஆண்களின் பாலுறுப்புத் தொடர்பான விருத்தசேதனம் செய்தல் தொடர்பில் பாதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்ற விடயங்கள் தொடர்பில் திருத்தயமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றை இல்லாதொழிப்பதாக நாங்கள் குறிப்பிடவில்லை சுன்னத் செய்வதை தடைசெய்வோம் என்று நாங்கள் குறிப்பிடவில்லை.


எவரேனும் ஒருவர் பாதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவதற்கு எதிரான சட்டங்களை ஆக்குவதாகத்தான் கூறியிருக்கின்றோம்.


இது வெறுமனே கொள்கை வெளியீட்டுக்கு வந்த ஒரு வாசகம் அல்ல. 1989 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துன்புறுத்தல் எனும் சொல்லுக்கான வரைவிலக்கணம் தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் முதலாவது விடயம் பெண்களுக்கான விருத்தசேதனம் செய்வது பற்றியதாகும்.

பெண்களுக்கு விருத்த சேதனம் செய்வது சுகாதார ரீதியாக அல்லது இனப்பெருக்க ரீதியாக சாதகமானதாக அமையமாட்டாதெனவும் அது தவிர்க்கக்கூடிய ஒரு விடயம் எனவும் முஸ்லிம் சமூகத்திலும் கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.

பலர் அதனை மறுக்கிறார்கள.; ஆண்களின் விருத்தசேதனம் தொடர்பாக துன்புறுத்தல் என்பதற்கு பின்வருமாறு பொருள் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. பலவந்தமாக, சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு முரணாக பயிற்றுவிக்கப்பட்ட பணியாளர்கள் இன்றிய செயற்பாங்கு ஒன்றுதான் துன்புறுத்தல் எனக் கூறப்படுகின்றது.


ஒருவர் துன்புறுத்தலுக்கு இலக்காவார் என்றால் அதற்கெதிராக சட்டங்கள் ஆக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 195 நாடுகள் இதனை அங்கீகரித்திருக்கின்றன.


பெரும்பாலான முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களும் இதனை நிறைவேற்றுவதற்காக கையை உயர்த்தியிருக்கின்றன.


இது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாசகம்.


தற்போது முஸ்லிம் சமூகத்தில் ஆண்களுக்கு சுன்னத் செய்து வருகிறார்கள். சுகாதார பாதுகாப்பு வழிமுறையின் கீழ் பயிற்றப்பட்ட சுகாதார பணியாளர்கள் மூலமாக அதனை செய்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். மறுபுறத்தில் இதனை செய்யும்போது பிள்ளையின் அனுமதியைப் பெறுவதற்கு கால அவகாசம் கிடையாது.


ஏனெனில், குழந்தை பிறந்து ஓரிரு நாட்களுக்குள் சுன்னத் செய்யப்படுகின்றது.


பெற்றோரின் விருப்பத்தின் பேரில்தான் பிள்ளைகளை எடுத்துச் செல்கிறார்கள். நாம் இங்கு குறிப்பிடுவது அதைப்பற்றியல்ல.

துன்புறுத்தல் என்பதற்கு இது ஏற்புடையதல்ல. பெற்றோரின் விருப்பத்துடன் வருகிறார்கள். சுகாதார பாதுகாப்புக்கு இணங்க பயிற்றப்பட்ட ஊழியர்கள்தான் இதனைச் செய்கிறார்கள்.


இதில் பிரச்சினை இல்லை. பலவந்தமாக, சுகாதார முறையியல்களை பின்பற்றாத செயன்முறை பற்றிதான் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றது


எனவே நாங்கள் கூறியுள்ள விடயம் மிகத் தெளிவாகவே இருக்கிறது. ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவெனில், எமது பொருளாதாரத்தை சீராக்கக் கூடிய வேலைத்திட்டத்துடன் முட்டிமோத முடியாதவர்கள் வேறு குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்தி, இவ்வாறான சொற்களைப் பிடித்துக்கொண்டு கொள்கை வெளியீட்டினை வாசித்திராத முஸ்லிம் மக்களுக்கு வேறொரு திரிபுபடுத்தப்பட்ட செய்தியைக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள்.


உண்மையிலேயே இவ்வாறான செய்திகள் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் இருந்துதான் வருகின்றன.


தற்போது இந்த ஊடகப் பிரிவில் இருப்பவர்களும் இதற்கு முன்னர் அதில் தொழில் புரிந்தவர்கள் அல்லர். ரணில் விக்ரமசிங்கவை மொட்டுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியாக்கிய பின்னர் அங்குமிங்கும் அலங்கார மீன்களை வளர்த்தவர்கள்,

சின்ன சின்ன பிஸ்னஸ் செய்தவர்கள் சென்று ஜனாதிபதி ஊடகப் பிரிவில் தொழில் பெற்றார்கள்.


அவர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. வாகனங்கள் கிடைக்கின்றது. எரிபொருள் கிடைக்கின்றது. தொலைபேசி கிடைக்கின்றது. பில் செலுத்துகின்றார்கள்.


இவை எல்லாமே மக்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான். இவர்கள் ஏதாவது சொற்களைப் பிடித்துக்கொண்டு சமூகவலைத்தளங்களில் போட்டு கேள்விக்கு உட்படுத்துகின்றார்கள்.


இதுவொரு பாரதூரமான விடயம். எமது நாட்டிலே சமயங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை மக்கள் தீர்மானகரமாக நிராகரித்துள்ளார்கள். அப்படி நடந்திராவிட்டால் கோட்டாபய ராஜபக்ஸ இன்னமும் ஜனாதிபதியாக இருந்திருப்பாரே?

கோல்ஃபேஸ் போராட்டத்தின் போதும், அதன்பின்னரும் மக்கள் இந்த இனவாதத்தை, மத தீவிரவாதத்தை எதிர்த்தார்கள்.


நாட்டு மக்களின் வரிப்பணத்தொகையில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டு இவர்கள் என்ன செய்கின்றார்கள்?

இனவாதத்தை தூண்டிவிடுகின்றார்கள். முஸ்லிம் மக்களிடையே தவறானதொரு எண்ணத்தை ஏற்படுத்த விளைகிறார்கள். எமது கொள்கை வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தைப் பாருங்கள்.


ஏன் நாங்கள் சீதனத்தைப்பற்றி கதைக்கின்றோம். சீதனத்திற்கும் இதற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? ஒரு தகப்பன் தன்னுடைய பெண்பிள்ளை திருமணம் செய்யும்போது விருப்பத்துடன் சீதனம் கொடுத்தால் அதனைத் தடுக்க முடியாது. ஆனால் சீதனம் என்பது ஒருவரை துன்புறுத்தக்கூடியதாக பலவந்தமாக மேற்கொள்ளப்படுமானால் அத்துடன் அந்த சீதனத்தை கொடுக்காதிருப்பதன் மூலமாக குடும்பத்துக்குள்ளே எவராவது பாதிக்கப்படுவாரேயானால் பிரஜையொருவர் அந்த துன்புறுத்தலுக்கு எதிராக செயலாற்ற வேண்டுமென நாங்கள் கூறியுள்ளோம்.


இதைத்தான் நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம். சமய மரபுகளின் அடிப்படையில் சுன்னத் செய்வதை தடுப்பது எமது நோக்கமல்ல என அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »