வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவத்தின்போது
கைதானோரை விடுதலை செய்யக்கோரியும், அதனை கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (17) மாலை இடம் பெற்றது.சமூக செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில்,
“கடந்த 08ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தில் வழிபாட்டின்போது கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்க“ எனவும்
“வழிபாடு எமது அடிப்படை உரிமை, ஆதி சிவன் ஆலயம் எமது பூர்வீகம்”
“ஈழத்தின் சமயத் தலைவர்களை அபகரிக்காதே, தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே“
“வழிபாட்டை தடுக்கும் உரிமையை காவல் துறையினருக்கு கொடுத்தது யார், ஆலய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்”
“ஆலயங்கள் சைவத் தமிழர்களின் பூர்வீக அடையாளம்“ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.