Our Feeds


Thursday, March 7, 2024

ShortNews Admin

கஜிமாவத்தை மக்களுக்கு வீடு வழங்க ஜனாதிபதி உத்தரவு!



கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைவாகவே இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அறிவித்தார்.


கொழும்பு கஜிமாவத்தை வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.


கொழும்பு மாநகரப் பகுதிக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத கட்டடங்கள் மற்றும் காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அந்த காணிகளை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


அரச துறையின் தலையீட்டுடன் தனியார் முதலீடுகள் ஊடாக இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


அத்துடன், கொழும்பு நகர எல்லையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுவரும், அரசாங்க வீடமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, மேலும் வீடமைப்புத் திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.


அத்துடன், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் இந்தப் பணிகள் சிரமமானதாக இருந்தாலும் பொருத்தமானமுறைமையைத் தயாரிக்குமாறு சுட்டிக்காட்டினார்.


முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி. விஜேசிறி, கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன மற்றும் துறைசார் நிறுவன அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »