எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்
வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்று (16) தெரிவித்தார்.வவுனியா மாவட்ட மாநாட்டில் உரையாற்றிய அவர், தீவிரவாதிகளோ இனவாதமோ இல்லாத மிதவாத தமிழ்த் தலைவர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடி வருவதாகத் தெரிவித்தார்.
“எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் இருக்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே தீவிரவாத அல்லது இனவாதமற்ற மிதவாத தமிழ்த் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அவர்கள் எமது கட்சியுடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களின் மொழிப்பிரச்சினை, காணிப்பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தி தீர்வு காணும் என்றும், தமிழர்களின் அரசியல் உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டுவரவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மொழிப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கிறோம். உங்கள் மொழியில் தேசத்தை கையாள்வதற்கான உரிமையை உறுதி செய்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.