28 பொதுநலவாய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அந்தந்த நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றங்களின் அதிகாரிகள் இதில் பங்கெடுத்தனர். பொதுநலவாய நாடுகளினுடைய பாராளுமன்றங்களின் பாரம்பரியம், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மற்றும் அதிகாரங்கள், அரசியலமைப்புச் சட்ட திட்டங்கள் இயற்றும் முறைகள் மற்றும் அவற்றின் சம்பிரதாயங்கள், நவீன சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பம், ஆய்வு முறைகள் என்பன பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட 75 வருடப் பூர்த்தியை முன்னிட்டு இவ்வருடம் பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுநலவாய நாடுகளின் 75வருடக் கொண்டாட்டத்திலும், லண்டன் நகரில் வெஸ்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையிலும் பங்கெடுப்பதற்கு இலங்கைப் பிரதிநிதிகளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன், பிரித்தானியாவின் அரசரான III வது சார்ள்ஸ் மன்னர் சுகவீனமுற்றிருப்பதால் அரச குடும்பத்தின் சார்பில் மகாராணி கமிலா, இளவரசர் வில்லியம்ஸ், இளவரசர் எட்வேர்ட் மற்றும் இளைவரசி ஆன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.