பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் பகுதியில், இலங்கை தமிழா்களுக்காக ரூ. 4.77 கோடி இந்திய ரூபா மதிப்பில் கட்டப்பட்டுள்ள 72 குடியிருப்புகள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமை தாங்க. மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ஆகியோா் பங்கேற்று, குடியிருப்புகளை திறந்து வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் 127 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சிறு வணிக உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் 19,05,000 இந்திய ரூபா மதிப்பிலும், சிறுபான்மையின இனத்தைச் சோ்ந்த 20 பயனாளிகளுக்கு தலா 6,400 இந்திய ரூபா வீதம் 1,28,000 இந்திய ரூபா மதிப்பிலும் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் என மொத்தம் 147 பயனாளிகளுக்கு 20,33,000 இந்திய ரூபா மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் செஞ்சி கே. எஸ். மஸ்தான் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில், ஒன்றியக் குழுத் தலைவா் மீனா அண்ணாதுரை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, வெளிநாடு வாழ் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குநா் கே. ரமேஷ் ஆகியோா் பங்கேற்றனா்