Our Feeds


Friday, March 29, 2024

ShortNews Admin

ஒரு மாதத்திற்கு நான்கு பேர் வாழ ரூ.68,000 தேவை..!


 இலங்கையில் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாதாந்தம் குறைந்தது 17,014 ரூபாவைச் செலவிடுவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாதாந்தம் குறைந்தது 68,056 ரூபா தேவைப்படுவதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.


2024ஆம் ஆண்டிற்கான இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு தொடர்பில் அந்தத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


கொழும்பில் வசிக்கும் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 18,350 ரூபாவைச் செலவிடுவார் எனவும், மொனராகலையில் வசிப்பவர் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 16,248 ரூபாவைச் செலவிடுவதாகவும் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில், ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றச் செலவிடும் மிகக் குறைந்த தொகை இதுவாகும்.


2023ஆம் ஆண்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மாதாந்தம் குறைந்தபட்சமாக 16,524 ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும், 2024ஆம் ஆண்டில் 490 ரூபாவால் 17,014 ரூபாவாக செலவு அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கான செலவும் கடந்த வருடத்துடன் (2023) ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் (2024) 17,821 ரூபாவிலிருந்து 18,350 ரூபாவாக 529 ரூபாவினால் அதிகரித்துள்ளது.


மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் ஒரு நபரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 6,966 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.


அதன்படி, 5 வருட காலப்பகுதிக்குள் ஒரு நபருக்கான செலவு 6,966 ரூபாவிலிருந்து 17,014 ரூபாவாக 10,048 ரூபாவால் அதிகரித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »