ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 21 போ் உயிரிழந்ததாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.
எனினும், தலிபான் ஆட்சியாளா்கள் இத்தாக்குதலில் 3 போ் உயிரிழந்ததாகக் கூறினா். இது குறித்து வெளிநாட்டு ஊடகமொன்று கூறுகையில்,
ஆப்கானிஸ்தான் தெற்குப் பகுதி நகரமான காந்தஹாரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா். இதில் 21 போ் உயிரிழந்ததாக அந்த நகர வைத்தியசாலை அதிகாரிகள் கூறினா். இருப்பினும், இத்தாக்குதலில் 3 போ் மட்டுமே உயிரிழந்ததாக தலிபான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தவிர, இத்தாக்குதலில் ஏராளமானவா்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸாா் கூறினா்.
தலிபான்களின் தலைமைப் பீடமான காந்தஹாரில் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு அந்நாட்டை தலிபான்கள் கடந்த 2021-ஆம் ஆண்டு கைப்பற்றினா். அப்போது மிக மோசமாக இருந்த நாட்டின் பாதுகாப்பு நிலைமை நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்டவை தலிபான் படையினரைக் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகின்றன.