1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார்.
சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா? அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார்.