நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த விவசாய
அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துவதாகவும், தற்போதும் 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கீடுகளை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார்.அதற்காக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் 232 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் வறட்சி ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதனால் நீரை முடிந்த வரையில் கவனமாக பாவனைச் செய்ய வேண்டியுள்ளது. சிறுபோகத்தில் 512,000 ஹெக்டயாரில் விளைச்சலை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். அதற்காகவும் நீரை கவனமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
அதேபோல் மேலதிக விளைச்சல் குறித்து அக்கறை காண்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது சோளம், கோதுமை, உருளைக் கிழங்கு போன்ற விளைச்சல்களில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தை பெரும் பணிகள் சார்ந்துள்ளன.
மேலும், இதுவரை பல புதிய அரிசி வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தும் செயற்திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய அரிசி வகைகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களில்தான் இந்நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது.
நெல் விளைச்சலுக்கு மேலதிகமாக, இந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் மிளகாய், வெண்டிக்காய், மாதுளை, கோதுமை போன்ற பல புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரின் ஆலோசனைக்கமைய 10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கீடுகளைப் பெற்றுகொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.” என்று விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மேலும் தெரிவித்தார்.