தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 12ஆம் திகதி நண்பகல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தேசிய வைத்தியசாலையின் தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்ய பொலிஸார் தற்போது முயற்சித்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன நேற்று (07) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சுகாதார ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
வைத்தியர் ருக்ஷான் பெல்லன, கனிஷ்ட சுகாதார ஊழியர்களைக் தாழ்த்தி வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே இந்த பிரச்சினையில் பொலிஸார் தலையிட்டு சுகாதார துறை தலைவர்களை கைது செய்ய முற்படுவது கவலைக்குரியதென்றும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.