களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
சுமார் 15 கோடி ரூபா பெறுமதியுடைய மனித பாவனைக்குதவாத 10 ஆயிரம் கோதுமை மா மூடைகளை கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.மனித பாவனைக்கு உதவாத காலாவதியான கோதுமை மா மூடைகள் சந்தையில் விற்பனைசெய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருப்பதாகச் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குத் இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, கனேவல்பொல பிரதேசத்தில் உள்ள பெரிய களஞ்சியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 25 மற்றும் 50 கிலோ நிறையுடைய மூடைகளில் மனிதப் பாவனைக்குதவாத கோதுமை மா கைப்பற்றப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிளகுகளை உலர்த்தி பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பெரிய களஞ்சியசாலை ஒன்றிலேயே இந்த மனிதபாவனைக்கு உதவாத கோதுமை மா மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கோதுமை மா காலாவதியாகியுள்ளதாகவும் அவை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும் குறித்த கோதுமை மாவில் காணப்பட்ட பூச்சிகளை விரட்ட கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த கோதுமை மாவில் விஷம் கலந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், காலாவதி திகதியை மாற்றி புதிய பொதிகளில் அவற்றை பொதி செய்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவெனத் தெரிவித்து விற்பனை செய்ய முற்பட்டமை சுகாதார வைத்திய அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.