இந்தியாவின் கொடுக்கல் வாங்கல் முறையான
UPI முறையை இலங்கையில் அமுல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கான காணொளி மாநாடு தற்போது இடம்பெற்று வருகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) சேவைகள் மற்றும் மொரீஷியஸில் ரூபே கார்ட் (RuPay card) சேவைகளை ஆரம்பிக்கும் மாநாடு காணொளி மூலம் சற்றுமுன் ஆரம்பமானது.
ஃபின்டெக் மற்றும் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னணியில் உள்ளது. நமது வளர்ச்சி அனுபவங்கள் மற்றும் புதுமைகளை சகோதர நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் இந்திய பிரதமர் வலுவான முக்கியத்துவம் அளித்துள்ளார்.
இலங்கை மற்றும் மொரீஷியஸுடனான இந்தியாவின் வலுவான கலாச்சார மற்றும் மக்களிடையேயான தொடர்பைக் கருத்தில் கொண்டு, இந்த அறிமுகமானது வேகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தின் மூலம் பரந்த அளவிலான மக்களுக்கு பயனளிக்கும் மற்றும் நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் மொரிஷியஸுக்குப் பயணிக்கும் இந்தியப் பிரஜைகளுக்கும், இந்தியாவுக்குப் பயணிக்கும் மொரிஷியஸ் நாட்டவர்களுக்கும் UPI தீர்வுச் சேவைகள் கிடைக்க இந்த சேவை உதவுகிறது.
மொரீஷியஸில் RuPay card சேவைகளை நீட்டிப்பதன் மூலம் மொரீஷியஸ் வங்கிகள் மொரீஷியஸில் RuPay பொறிமுறையின் அடிப்படையில் அட்டைகளை வழங்குவதற்கும், இந்தியா மற்றும் மொரீஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் ருபே அட்டையை பயன்படுத்துவதற்கும் உதவுகிறமை குறிப்பிடத்தக்கது.