(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவருடனும், அரசியல் கட்சித் தலைவர்களுடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதனை விடுத்து கட்சியின் உறுப்பினர்களுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஜனாதிபதியின் சிரேஷ்டத்துவத்துக்கு பொருத்தமற்றது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி உண்மை நோக்கத்துடன் அறிவிக்க வேண்டும் அப்போது தான் நம்பிக்கை ஏற்படும்.அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை ஆளும் தரப்புக்குள் இணைத்து அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கினால் எவ்வாறு நம்பிக்கை தோற்றம் பெறும்.
எமது கட்சியின் உறுப்பினர் ஒருவரை ஆளும் தரப்புக்குள் வரவழைத்து அவருக்கு அமைச்சு பதவி வழங்கினார்.நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி கூட பறிபோனது. ஆகவே கட்சிகளின் உறுப்பினர்களுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் எதிர்க்கட்சித் தலைவருடனும், ஏனைய அரசியல் கட்சி தலைவர்களுடனும் வெளிப்படைத்தன்மையுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ‘எமது அரசாங்கத்தில் அனைவரும் உள்ளார்கள்’ என்ற விம்பத்தை சர்வதேசத்துக்கு காண்பிக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். இது அவரது அரசியல் சிரேஷ்டத்துவத்துக்கு பொருத்தமற்றது என்றார். – Vidivelli