Our Feeds


Sunday, February 18, 2024

SHAHNI RAMEES

அம்பாறை மாவட்ட கல்வியை சீரழிக்க எடுத்த முயற்சியை முறியடித்தேன் ; ஹரீஸ் M .P




கிழக்கின் அதிகார மையம் ஏற்றத்தாழ்வு மிக்கதாக உள்ளது

: அம்பாறை மாவட்ட கல்வியை சீரழிக்க எடுத்த முயற்சியை முறியடித்தேன்.- எச்.எம்.எம். ஹரீஸ்


நூருல் ஹுதா உமர்


முப்பது வருடங்களுக்கு முன்னர் இணைந்த வடகிழக்கு, ஆயுதப் பின்னணி என பயங்கரமாக இருந்த கிழக்கு மாகாணத்தில் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் ராஜதந்திரமாக காய் நகர்த்தினார்.



ஆனால் இன்று உலகமே உற்று நோக்கிக் கொண்டு யாரை யாரும் அச்சுறுத்த முடியாத ஜனநாயக சூழலில் 42 சதவீதத்துக்கும் கூடிய முஸ்லிம்கள் கிழக்கில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அவர் கோபித்துவிடுவார் இவர் கோபித்து விடுவார் என்று பொறிமுறை இல்லாதவர்களாக முஸ்லிம் மக்களும் நமது தலைமைத்துவங்களும் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.



அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த கல்வி விருது விழா சனிக்கிழமை நடைபெற்ற போது அங்கு கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,


அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அவமானப்படும் விடயம், திருகோணமலை கல்வி திணைக்களத்தில் தமக்கான தேவைகளை நிபர்த்திக்க அலைமோதும் விடயம், அநியாய இடமாற்றங்களினால் கற்பிணிகள் பாதிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இவர்களை அரசியல் சாயம் பூசி அடித்து துரத்த தயாராகிறார்கள். இவற்றையெல்லாம் முறியடிக்க நாங்கள் கடுமையாக பிரயத்தனங்களை எடுக்கிறோம். இந்த நிலை ஏன் உருவானது? என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.


2021 ம் ஆண்டின் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் ஆசிரிய பற்றாக்குறை அம்பாறையில் இருக்கத்தக்கதாக 400 ஆசிரியர்கள் ஒரு தடவையில் மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் செய்ய எத்தனித்த விடயம் அம்பாறையில் ஆசிரியர்கள் மிதமிஞ்சி இருப்பதனாலா என்றால் இல்லை. அதன் பின்னணி பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். கிழக்கு கல்வி உயரதிகாரி ஒருவர் புதிதாக வந்துகொண்டு ஜனாதிபதி, ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற யாரையும் பற்றியோ புரட்டகோல் பற்றியோ அலட்டிக்கொள்வதில்லை. அவரின் சுயரூபத்தை நான் கல்வியமைச்சில் வைத்து ஓராண்டுக்கு முன்னர் அறிந்துகொண்டேன். இப்போது இந்த பதவியை வைத்துக்கொண்டு அவரின் நீண்டநாள் கனவான அம்பாறை கல்வி அடைவை குறைக்க முயல்கிறார். இதற்கு பலியாக போவது புத்துணர்வு மிக்க இளம் ஆசிரிய சமூகம். நன்றாக கற்பிக்கும் ஆசிரியர்களை மட்டக்களப்பு மாவட்ட மூலைமுடுக்குக்கெல்லாம் இடமாற்றம் செய்ய திட்டம் போடப்பட்டுள்ளது. இதை வருடாந்த இடமாற்றம் என்று நினைக்க வேண்டாம். இது புளியந்தீவிலுள்ள ஒரு குழுவின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல். இதனை முறியடித்து ஜனாதிபதி செயலாளர், ஆளுநரை கொண்டு நாங்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்துள்ளோம். கிழக்கின் அதிகார மையம் ஏற்றத்தாழ்வு மிக்கதாக உள்ளதை யாரும் மறுக்க முடியாது.


செயற்திறன் கூடிய அதிபர்கள் பாடசாலைகளை பொறுப்பேற்று நடத்த முன் வருகின்ற போது நிறைய புரட்சிகள் பாடசாலைகளில் நடக்கிறது. மாணவர்கள் சேர்க்கை குறைந்து கல்வியில் வீழ்ந்து கிடந்த இரண்டு பாடசாலைகளை இப்படியான செயற்திறன் கூடிய அதிபர்கள் மேம்படுத்தி இன்று மாணவர்களை சேர்க்க பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசு தேவைப்படுமளவுக்கு அந்த பாடசாலைகளில் கல்வி உயர்ச்சி கண்டுள்ளது. இப்படியான அதிபர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. அப்படியான அதிபர்களாக நீங்களும் உங்கள் பணியை சிறப்பாக செய்து கல்வித்துறையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »