இனவாதம் மற்றும் மதவாதத்தை ஒதுக்கிய, உலகின் அனைத்து நாடுகளும் விரைவான அபிவிருத்தியை அடைந்துள்ளன. நல்லிணக்கத்தின் ஊடாக அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 'நல்லிணக்கத்துக்கான மதங்கள்' தேசிய சர்வமத மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
மதத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் உள்ள தொடர்பை நாங்கள் நன்கு அறிவோம். எங்களுக்கு இனவாதம் மற்றும் மதவாதம் பற்றிய அனுபவம் உள்ளது. இதன் விளைவாக, நாங்கள் ஒரு பயங்கரமான போரை எதிர்கொண்டோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் சகவாழ்வு தொடர்பில் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அனைத்து மதத் தலைவர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. நம் எண்ணங்களில் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் வாதிகளின் எண்ணம் அதிகாரத்தைப் பெறுவதிலே உள்ளது. அந்தந்த இடங்களில் இருக்க வேண்டும் என்பதே மதத் தலைவர்களின் சிந்தனை. இதற்கெல்லாம் குறுக்குவழி இனவாதம் மற்றும் மதவாதமாகும். 1930 முதல் நம் நாட்டில் இது நடந்து வருகிறது. இறுதி முடிவு என்ன என்பதை நான் குறிப்பிடத் தேவையில்லை.
உதாரணமாக, சிங்கப்பூரில் இனவாதமோ மதவாதமோ இல்லை. பல மொழிகள் பேசுவோர் இருந்தாலும், சிங்கப்பூர் இன்று துரித வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார்.