முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(02) நடந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இதை தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இரண்டாவது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எமது கட்சி தீர்மானித்தது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்கப் போகிறார் என்பதை அறிந்து நாங்கள் கையெழுத்து சேகரிக்கும் பணியை ஆரம்பிக்காது விட்டோம்.
எவ்வாறாயினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கூடுவதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடும் பணியை ஆரம்பிப்போம்.
ஊழலுக்கு துணை போவது யார்? எதிராக நிற்போர் யார் என்பதை பொதுமக்கள் அறியும் வகையில் கையெழுத்து விபரங்களை இம்முறை பகிரங்கப்படுத்துவோம்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கும் மனித இம்யூனோகுளோபுலின் மோசடிக்கும் தொடர்பு இருப்பது நீதிமன்றில் வெளியாகும் தகவல்களின் படி தெளிவாக புலப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்.