செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடநெறிகளை கல்வி முறைமையில் அறிமுகப்படுத்துவதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடநெறிகளை கல்வி முறைமையில் அறிமுகப்படுத்தல் தொடர்பாக 2023.10.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது செயற்கை நுண்ணறிவுக்குரிய தேசிய மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய உத்தேச பாடநெறிகளை அறிமுகப்படுத்தல் பொருத்தமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த மூலோபாயத் திட்டத்தின் ஒரு கூறாக பொதுக் கல்விக்குரிய செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடநெறிகளை அறிமுகப்படுத்துவதற்காக முன்னோடிக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:
தற்போது மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச பாடவிதானங்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் விதந்துரையின் அடிப்படையில் திருத்தம் செய்து தேவையான அடிப்படை மனித வளங்கள் காணப்படுகின்ற பாடசாலைகளில் 08 ஆம் தரத்திலிருந்து உத்தேச முன்னோடிக் கருத்திட்டத்தை ஆரம்பித்தல்.
மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தால் வழங்கப்படும் வசதிகளின் கீழ் முன்னோடிக் கருத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்படும் பாடசாலைகளை டிஜிட்டல்மயப்படுத்தல்.
தகவல் மற்றும் தொழிநுட்ப பாடத்திட்டத்தை கற்பிக்கின்ற 100 ஆசிரியர்களை மைக்ரோசொஃப்ற் நிறுவனத்தால் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்றுவித்தல் என்ற திருத்தங்களின் கீழ் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.