தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத் இன்று (29) உத்தரவிட்டார்.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னந் தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கடந்த 19 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் இன்றைய தினம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் கே.எல்.எம்.சாஜீத் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார்
இதன் போது உயிரிழந்த சிறுமியின் தாய்,தந்தை,அம்மம்மா உள்ளிட்ட 5 பேரிடம் நீதவான் விசாரணைகளை மேற் கொண்டார்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,அன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு தவணையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நகர் நிருபர்