Our Feeds


Tuesday, February 20, 2024

ShortNews Admin

சுமந்திரன், பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிக்கிறார் - ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சாடல்.



தமிழ் அரசு கட்சிக்கு எதிராக யாழப்பாணம், திருகோணமலையில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாக முடியாது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.


இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,


இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு எடுத்திருந்த தீர்மானங்களுக்கு எதிராகவும் தேசிய பேராளர் மாநாட்டுக்கு எதிராகவும் திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் பெறப்பட்டுள்ள இடைக்கால நீதிமன்ற கட்டாணைகள் தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் 16.01.2024 ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தார், அவ் அறிக்கையில் கட்சியின் தலைவர்களும் வழக்கின் எதிராளியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் தனது சகாக்களும் கேட்டுக் கொண்டால் கட்சிக்காக அவர் முன்னிலை ஆவதற்கும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.


சட்டத்தின் பார்வையில் இந்தச் செய்தி சட்ட நுணுக்கமற்ற சிறுபிள்ளைத்தனமானது என்பது சட்டம் தெரிந்த யாவருக்கும் இலகுவாக புரியும். யாழ்ப்பாணத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தமிழரசு கட்சிக்கு புதிதாக தேர்வான தலைவர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு 31.01.2024ம் எழுதப்பட்ட கடிதம் ஊடகங்களில் பிரசுரமாகி இருந்தது. 


வழக்காளியான பீட்டர் இளஞ்செழியன் தாக்கல் செய்த இவ்வழக்கில் “வ4” என்று அடையாமிடப்பட்டு அந்தக் கடிதம் ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் வேளையில் சுமந்திரன் நீதிமன்றத்திற்கு ஒரு சாட்சியாக அழைக்கப்பட முடியும் வழக்கில் சாட்சியாக அழைக்கப்படும் எவரேனும் அந்த வழக்கில் மற்றைய எதிராளிக்காக முன்னிலையாவது நடைமுறையில் சாத்தியமற்ற விடயமாகும் . ஏனெனில் ஒரு வழக்கில் சாட்சியாக குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் அதே வழக்கில் சாட்சியமளிக்க மட்டுமே முடியும்.


அத்தோடு திருகோணமலையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்; 6ம் எதிராளியாக சுமந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்; எனவே எதிராளி தனக்குத் தானே வாதாட முடியுமே தவிர கட்சிக்காகவோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற எதிராளிகளுக்காகவோ எக்காரணம் கொண்டும் வாதாடுவதில்லை. அவர் தன்னை காத்துக் கொள்ள தனக்காக மட்டுமே வாதாட முடியும். மேலும் தனக்காக வாதாடுபவர்கள் சாட்சியம் அளிக்கும் சூழ்நிலையும் உருவாகலாம்.


ஒரு நடைமுறை சாத்தியமற்ற விடயத்தை எந்த நீதிமன்றமும் அனுமதிப்பதும் இல்லை கடைப்பிடிக்கப்படுவதுமில்லை. சட்டத்தின் அடிப்படைகள் மேலோட்டமாக தெரிந்த ஒருவருக்கு கூட இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய இந்த விடயத்தை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் பிரதான விடயத்தை திசை திருப்புவதற்காக மாத்திரம் விடுக்கப்பட்ட ஒன்றாக மட்டுமே என்னால் அவதானிக்க முடிகின்றது.


தமிழ் அரசுக்கட்சியை பாதுகாப்பேன் என்பது பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயல்பாடாகும் எனக் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »