ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தினால் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே, பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த இரண்டாண்டு காலமாக நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளையும், அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிகளையும் எதிர்க்கொண்டது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தை காட்டிலும் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கடந்த ஆண்டு இரட்டை இலக்கத்தில் காணப்பட்ட உணவு மற்றும் உணவு அல்லாத பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்துக்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். சுற்றுலாத்துறை சேவைக் கைத்தொழில், விவசாயத்துறை உள்ளிட்ட சேவைத்துறைகள் முன்னேற்றமடைந்துள்ளன.
விவசாயத்துறைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாய விளைச்சாலை இரட்டிப்பாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேசிய விவசாயத்துறையை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது.
ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வெளிப்படைத்தன்மையுடனான செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அஸ்வெசும நலன்புரித் திட்டம் வினைத்திறகான முறையில் செயற்படுத்தப்படுகிறது. நெருக்கடியான சூழ்நிலையிலும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்கியுள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் தீர்மானங்களுக்கும்,செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஒருசில காரணிகளை மாத்திரம் வரையறுத்துக் கொண்டு பொருளாதார பாதிப்பை அளவிட முடியாது.பூகோள காரணிகள் பொருளாதார பாதிப்புக்கு பிரதான காரணியாக அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரச சேவையாளர்கள் எவரையும் சேவையில் இருந்து நீக்கவில்லை. முறையான முகாமைத்துவத்துடன் அரச சேவையாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதம் முதல் கொடுப்பனவுகளை முழுமையான அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளோம். அதேபோல் ஓய்வூதியம் பெறுநர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் சவால்கள் அதிகமாக காணப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சவால்களை வெற்றிக் கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன். இளைஞர், யுவதிகளின் நலன் கருதி விசேட செயற்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய தொழிற்றுறை திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நடைமுறைக்கு பொருத்தமான பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் வகையில் 'புதிய மத்திய வங்கி சட்டம்' உருவாக்கப்பட்டுள்ளது. சிறந்த மாற்றத்துக்கு மத்தியில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் கடன் நிலை மீது சர்வதேசம் தற்போது நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டு மக்கள் வழங்கியுள்ள மக்களாணையை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும். ஆகவே பொருளாதார மீட்சிக்கு எடுக்கும் தீர்மானங்களுக்கு பாராளுமன்றம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.