இலங்கையின் பிரபல வனங்களில் ஒன்றான “ஜாதிக நாமல் உயன” வனத்தை பார்வையிட சென்ற பேருவலை குர்ஆன் மத்ரஸா மாணவிகளின் செயல் சிங்கள சகோதரர்களினால் சமூக ஊடகங்களில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
ஜாதிக நாமல் உயன வனத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் பேருவலையிலிருந்து வனத்தை பார்வையிட வந்த குர்ஆன் மத்ரஸா மாணவிகள் சற்று தாமதமாக வந்து சேர்ந்த நிலையில் வனத்தில் வைத்து தொழுகையில் ஈடுபட்டார்கள். என்ற குறிப்பு செய்தியுடன் அவர்கள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு 5 தடவைகள் இறைவனை வணங்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாக இருக்கிறது. அந்த வகையில் இஸ்லாமியர் ஒருவர் எங்கிருந்தாலும் நேரம் தவறாமல் குறித்த தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும். ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக மாற்றிக்கொண்டால் அவர் முதலில் செய்ய வேண்டிய கடமையே தொழுகை தான்.
இஸ்லாமியர்கள் தமது குழந்தைகளுக்கு சிறுவயது முதல் தொழுகையுடனான ஈடுபாட்டை கற்றுக்கொடுத்து வளர்க்கிறார்கள். ஒரு நாளைக்கு ஐந்து நேரங்கள் தொழுகையில் ஈடுபடுவதுடன் வாரத்தில் ஒரு நாளாக வெள்ளிக்கிழமையில் ஜூம்ஆ என்கிற கூட்டுத் தொழுகையிலும் முஸ்லிம்கள் பங்கெடுக்கிறார்கள்.
இந்நிலையில் தான் பேருவலையிலிருந்து ஜாதிக நாமல் உயன வனத்தை பார்வையிட சென்ற குழந்தைகள் தொழுகைக்கான நேரத்தில் தமது தொழுகையில் ஈடுபட்டமை தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.