Our Feeds


Wednesday, February 14, 2024

News Editor

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது சாத்தியமற்றது - பிரதீபா மஹாநாம


 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்,மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும். ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தற்போது சாத்தியமற்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை' பிரதான அம்சமாக காணப்படுகிறது.ஆகவே அரசியலமைப்பின் பிரதான அம்சமாக காணப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்ய வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன்,மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.

1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.ஆனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு இரண்டு முறை பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.ஆனால் அந்த முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை.

ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் பெரும்பாலான நாடுகளில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை தற்போது நடைமுறையில் இல்லை.பாராளுமன்றத்தை முன்னிலைப்படுத்திய அமைச்சரவை தலைமையிலான அரசாங்கங்கள் தான் தற்போது செயற்பாட்டில் உள்ளது,ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது சிறந்தது.

 தற்போதைய பாராளுமன்றத்தின் மக்களாணை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை சாத்தியமற்றது.ஆகவே தற்போதைய நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது சாத்தியமற்றது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »