Our Feeds


Tuesday, February 27, 2024

SHAHNI RAMEES

அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்யத் தயார் – அமைச்சர் டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

 

இந்திய அரசிடமிருந்து இலங்கை அரசிற்கு மீனவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமானால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீனவ மக்களுடன் இணைந்து கடலில் போராடுவேன் என கடத்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இலங்கைக்கான இந்திய தூதுவருடன் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் அதிகாரப் பகிர்வு குறித்து கலந்துரையாடினோம். நான் நீண்டகாலமாக எதை கூறி வந்தேனோ அதைத்தான் வரலாறும் இன்றைக்கு ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

 

அன்றைக்கு நான் சொன்னதை சக கட்சிகள், சக இயக்கங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைக்கு இந்த அழிவுகள், இழப்புக்கள், துன்பங்கள் வந்திருக்காது என்று நான் அவரிடம் கூறியிருந்தேன்.

 

நாட்டினுடைய வருங்கால அரசாங்கம் எப்படி இருக்கும், யார் இருப்பார்கள் என்றும் கலந்துரையாடினோம்.

 

அதைவிட மிக முக்கியமாக சமீபத்தில் ஜேவிபி கட்சியின் தலைவர் புதுடெல்லிக்கு சென்று இருந்தார். ஆனால் அவர் அங்கு எமது கடல் தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. அதைவிட வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கடந்தவாரம் இந்திய தூதுவர் சந்தித்திருந்தார். அங்கு கூட நமது கடல் தொழில் மக்களின் பிரச்சினைகள் குறித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எவற்றையும் சொல்லவில்லை.

 

ஆனால் என்னுடைய பேச்சுவார்த்தையில் கூடியளவு நேரம் அத்துமீறிய சட்டவிரோத இந்திய கடல் தொழிலாளர்களினால் எமது வளங்கள் சுரண்டப்படுகிறது, எங்களுடைய கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு வினாடி கூட அந்த தடை செய்யப்பட்ட அந்த சட்டவிரோத தொழிலுக்கு இடம் கொடுக்க முடியாது என்பதை நான் தெரிவித்திருந்தேன்.

 

ஆனால் அதைத் தொடர்வதற்கான அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுமாக இருந்தால் நான் அமைச்சரவையில் இருந்து இராஜிநாமா செய்துவிட்டு, எமது கடல் தொழிலாளர்கள் இணைந்து கடலில் அதனை எதிர்ப்பதற்கு தயாராக உள்ளேன் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

பு.கஜிந்தன்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »