நாட்டில் ஏற்படுத்தப்படவிருக்கும் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றவாறு பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது விழா 2023’ இல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை பெண்கள் தொழில்துறை மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது விழாவில் சிறந்த பெண் வர்த்தகர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் வியாபாரம், சந்தை பிரவேசத்தை வலுவூட்டும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டதோடு, சார்க் வலயத்தை சேர்ந்த பெண்களுக்கு விசேட பிரிவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பத்து சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது ஜனாதிபதி உரையாற்றுகையில்,
கடந்த சில வருடங்கள் சுமூகமானதாக இருக்கவில்லை. வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெருக்கடியான காலகட்டமாக அமைந்திருந்தது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொழிலை முன்னெடுத்துச் செல்ல நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.
2024 ஆம் ஆண்டில் ஓரளவு பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கடைசி இரண்டு காலாண்டுகளில் சாதகமான பொருளாதார வளர்ச்சியை எம்மால் அடைய முடிந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் இருந்த பொருளாதார வளர்ச்சியை இன்னும் எட்ட முடியாதுள்ளது. அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படும் என்றார். (