உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்களில் ஒன்பது
விடயங்கள் உள்ளீர்க்கப்படாது நிகழ்நிலை சட்டத்தினை சான்றுரைப்படுத்திய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நிகழ்நிலைச் சட்டமூலம் மீதான விவாதம் கடந்த மாதம் 23,24ஆம் திகதிகளில் நடைபெற்ற திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. எனினும், குறித்த சட்டமூலத்தில் உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் 13 உள்ளடக்கப்படவில்லை என்பதோடு ஏனையவை பற்றி ஆராய்வதற்கு அரசாங்கம் காலஅவகாசத்தினை வழங்காது அவசரஅவசரமாக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சுமந்திரன் சபையிலும், சபைக்கு வெளியிலும் குறிப்பிட்டிருந்தார்.
அதனையடுத்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்றக்குழு ஆகிய தரப்பினர் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வார்கள் என்றும் அறிவித்தார்.எனினும், கடந்த முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சபாநாயகர் நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்க சான்றுரைப்படுத்தினார்.
இந்நிலையில் குறித்த சட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைச் சட்டத்தின் உள்ளடக்கத்தினை ஆராய்ந்தே அதனை சான்றுரைப்படுத்துவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நாம் சான்றுரைப்படுத்துவதற்கு முன்னதாக எமக்கும் அதன் உள்ளடக்கத்தினை பகிருமாறு கோரியிருந்தோம். எனினும் அவர் அதனைப் பகிர்ந்திருக்கவில்லை.
இதேநேரம், சட்டம் சான்றுரைப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் உள்ளடக்கத்தையும் உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த விடயங்களை மையப்படுத்தி ஒப்பிட்டுப்பார்த்தபொது ஒன்பது விடயங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றம் சட்டமூலமொன்று தொடர்பில் பரிந்துரைகளைச் செய்கின்றபோது அதனை உள்ளீர்த்தே நிறைவேற்ற வேண்டும் என்பத அரசியலமைப்பின் உறுப்புரை 123(4)இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு அடுத்தபடியாக, சபாநாயகர் சன்றுரைப்படுத்திய பின்னர் அதனை சவாலுக்கு உட்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. எனினும் நாம் அந்த விடயத்தினை சட்ட ரீதியாக கையாள்வது தொடர்பில் ஆராய்கின்றோம்.
எனினும், சபாநாயகர் நிகழ்நிலைச் சட்டத்தினை சன்றுரை வழங்கிய செயற்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நம்பிக்கையில்லாப்பிரேரணையை கொண்டுவருவதற்கு உள்ளோம்.
இதுதொடர்பிலான பேச்சுக்களை நாம் எதிரணிகளுக்குள் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்தப் பிரேரணை ஊடாக சபாநாயகரின் செயற்பாட்டை அம்பலப்படுத்துவோம் என்றார்.