பாறுக் ஷிஹான்
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் வெள்ளிக்கிழமை (16) மாலை அப்பகுதியில் சோக நிலையயை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காணாமல் போன சூர்தின் முஹம்மட் முன்ஸிப் என்ற மாணவனின் உடல் இன்று காலை ஒலுவில் பகுதியில் கரையோதுங்கியுள்ளது.
மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவ தினம் மாளிகைக்காடு- சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்களே பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13-15 வயதுக்குட்பட்ட 08 பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் கடல் அலை உள்ளிழுத்து சென்றுவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தவிர ஏனைய ஆறு மாணவர்களிடம் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.