Our Feeds


Wednesday, February 28, 2024

SHAHNI RAMEES

ரணிலுக்கு ஆதரவளிக்காமல் இருக்க மொட்டுக் கட்சிக்கு உரிமையில்லை -அமைச்சர் பிரசன்ன...

 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் இருக்க பொஹொட்டுவவுக்கு உரிமை இல்லை என தனிப்பட்ட முறையில் தாம் நம்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொஹொட்டுவவிற்கு மாற்று வேட்பாளர் இல்லை என்றால் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதே சிறந்தது என அவர் வலியுறுத்தினார்.

 

 

 

பொஹொட்டுவவிற்கு வேறு மாற்று வேட்பாளர் இருப்பதாக தாம் அறியவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

 

காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இன்று (28) காலி கோட்டையில் உள்ள ஹோல் டி கோல் மண்டபத்தில் நடைபெற்றது.

 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

 

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க எமது கட்சித் தலைவர்களே தீர்மானம் எடுத்தனர். எமது கட்சியின் தலைவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க ஆதரவளித்தோம். தற்போது பொருளாதார சவாலை வென்று நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு பொஹொட்டுவ எடுத்த தீர்மானம் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சிறந்த முடிவாகவே கருதுகிறேன். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்த நாட்டை மீட்பதற்கான திறன் வேறு எவருக்கும் இல்லை. அப்போது ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு பலரிடம் கேட்டபோது, மறுத்துவிட்டனர். அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் இந்தப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை.

 

எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதே இந்த தருணத்தில் கட்சி என்ற வகையில் நாம் எடுக்க வேண்டிய சரியான முடிவு என நான் கருதுகிறேன். அவர் எந்த கட்சி, எந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார் என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்யலாம்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போதுமே மக்களைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் சிந்தித்து முடிவுகளை எடுக்கும் கட்சியாகும். பஷில் ராஜபக்ச விரைவில் இலங்கை வருகிறார். அவர் இலங்கைக்கு வந்த பின்னர் கட்சி பொறிமுறையை பலப்படுத்தி கட்சியை பலப்படுத்துவார். அதன் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் எடுக்கப்படும் தீர்மானத்தை கூறுவோம்.

 

முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என சிலர் கூறுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேர்தலை நடத்துவது தொடர்பில் எவரும் தமது தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்தார். ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்ததாக ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும் எனவும் எனவே இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் நிச்சயமாக தயாராகி வருவதாகவும் அமைச்சர் கூறினார். அது சம்பந்தமாக சிலர் கூறும் கருத்துக்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »