நாட்டில் கடந்த வருடத்தில் 39ஆயிரத்து 115 புற்று நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கில் ஒரு பங்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளனர். அதற்கமைய, வருடத்துக்கு அண்ணளவாக 27சதவீதமான பெண்கள் மார்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
அண்மைக்காலமாக நாட்டில் மார்பக புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, கடந்த வருடம் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய நாளாந்தம் 103 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 2019ஆம் ஆண்டு 15ஆயிரத்து 598 பேர் இந்நோயினால் உயிரிழந்திருக்கிறார்கள். அவ்வாறெனில், நாளொன்றுக்கு புற்றுநோயினால் 42பேர் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கைகள் மிகவும் உயர்ந்த மட்டத்தை வெளிப்படுத்துவதாக சுகாதார அமைச்சின் புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு குடும்ப சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி உலக புற்றுநோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆனால், இந்த நோயை ஒரு நாளில், திட்டத்தினால் ஒழித்துவிட முடியாது. ஒவ்வொருநாளும் அதற்காக செலவிட வேண்டும். 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின்படி புற்றுநோயினால் வருடாந்தம் 10 மில்லியின் பேர் உயிரிழக்கிறார்கள். அதேபோன்று, உலக நாடுகளில் மார்பகப்புற்று, நுரையீரல் புற்று, பெருங்குடல் புற்று, மலக்குடல் புற்று என்வற்றினால் அதிகளவானோர் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கமைய, எதிர்வரும் 20 வருடங்களில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்படும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என புற்றுநோய் தொடர்பில் மதிப்பீடு செய்யும் அமைப்பு எதிர்வு கூறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,
உலகின் 158 நாடுகளில் பெண்களின் மத்தியில் பெரும்பாலும் மார்பகப்புற்று அதிகரித்துள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் 2021ஆம் ஆண்டு இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய, மொத்தமாக 37 ஆயிரத்து 753 புதிய புற்று நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17 ஆயிரத்து 582 பேர் ஆண்கள் என்பதுடன் 20 ஆயிரத்து 171 பெண்களும் புற்றுநோயாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். அந்த வருடத்தில் மொத்தமாக 5ஆயிரத்து 112 பேர் புற்றுநோயினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டில் 39ஆயிரத்து 115 பேர் புதிய புற்றுநோயாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்கள் வெவ்வேறு புற்றுநோய் சிகிச்சை மத்திய நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அநேகமான, அண்ணளவாக வருடமொன்றுக்கு 37,000 – 40,000 இடையிலேயே புற்றுநோயாளர்கள் பதிவாவார்கள். அதற்கமைய, நாளொன்றுக்கு 103 பேர் வரையில் புற்று நோயாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளார்கள்.
2005ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை பார்த்தால் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து
வருகிறது.
இலங்கையில் மாத்திரமல்ல, உலகம் முழுவதும் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. சனத்தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் புற்றுநோய் பாதிப்பும் அதிகரித்துள்ளது என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அது மாத்திரமல்லாமல் ஆரம்பத்திலேயே புற்றுநோயை அடையாளம் காண்பதற்கான முறைகள், சிகிச்சை மத்திய நிலையங்கள் அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக அடையாளங் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இலங்கையை பொறுத்தவரையில் ஆண்கள் மத்தியில் 13 வீதம் வாய்ப்புற்று ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நுரையீரல் புற்று, மலக்குடல் புற்று என்பனவும் அதிகரித்துள்ளன. புகையிலை பயன்பாட்டின் காரணமாகவே இந்த புற்று நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன.
பெண்களை பொறுத்தவரையில், பதிவு செய்யப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கினர் மார்பக புற்றினால் பாதிக்கப்படுகிறார்கள். 45 – 50 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு இடையிலேயே அதிகம் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக 27 சதவீதமான பெண்கள் மார்பகப் புற்றினால் பாதிப்படைகிறார்கள். இதற்கு மேலதிகமாக தைரொய்ட் புற்று, பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று, கர்ப்பப்பை புற்று, கர்ப்பப்பை வாய்ப் புற்று என்பனவும் பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று நோய் ஆண்கள் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. மேற்குறிப்பிட்டதற்கு அப்பால் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் 2019 ஆம் ஆண்டு 15ஆயிரத்து 598 பேர் புற்றுநோயால் உயிரிழந்திருக்கிறார்கள். அவ்வாறெனில், நாளொன்றுக்கு புற்றுநோயினால் 42 பேர் உயிரிழக்கிறார்கள். இது மிகவும் உயர்ந்த மட்டமாகும் என்றார்.