அக்குறணை பிரதேச சபையின் சகல கொடுப்பனவுகளையும்
இலகுவாக ஒன்லைன் “ONLINE” மூலம் செய்து கொள்ள புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகம்...முன்னால் தவிசாளர் - குறிப்பு :
அக்குறணை போன்ற பரபரப்பான வர்த்தக நகரில் மக்களது மும்முரமான வேலைகள், போக்குவரத்து இடைஞ்சல்கள் என்பவற்றின் காரணமாக பிரதேச சபையுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளை செலுத்துவதில் பல்வேறுபட்ட இடர்பாடுகளை அனுபவித்தனர். இதற்கு தீர்வாக பிரதேச சபையுடன் தொடர்புடைய சகல கொடுப்பனவுகளையும் ஒன்லைன் வழியாக செலுத்தக்கூடிய முறையில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு தங்களது கொடுப்பனவுகளை செலுத்துகின்ற செயற்பாடுகள் இலகுவாக இருக்கும்.
இலங்கையின் அரச பொது நிர்வாகங்களை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலை திட்டத்திற்கு அமைய "பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவலர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்" இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் செயல்படுத்த உத்தேசித்து இருக்கின்றது.
இது உள்ளூராட்சி மன்றங்களில் முதன் முதலாக அக்குறணை பிரதேச சபையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது பிரதேச சபையின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கையில் இது முதன் முதலாக அக்குறணை பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது கடந்த ஆண்டுகளில் எமது பிரதேச சபை "தேசிய உற்பத்தி" திறன் ஜனாதிபதி விருதுகளை வென்றது ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
இன்று இருக்கும் வேலை பளுக்களுக்கு மத்தியிலும் அனாவசிய செலவுகளை தவிர்க்கும் வகையிலும் இந்த டிஜிட்டல் மயமாக்கல் பொதுமக்களுக்கு பெரிதும் உதவி புரியும் என்று நாம் நம்புகின்றோம். அது மாத்திரமன்றி நிர்வாக செயற்பாடுகளையும் இது இலகுபடுத்துவதாக அமையும். மேலும் எதிர்வரும் காலங்களில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இது இன்னும் இன்னும் மேம்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளினை ஏற்று இச்செயற் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எமக்கு உதவி புரிந்த கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜானக வகும்பர் அவர்கள், இந்த செயற் திட்டம் எங்களுக்கு வந்தடைவதற்கு பெரும் துணை புரிந்த மத்திய மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கௌரவ குணத்திலக்க ராஜபக்சே அவர்கள், இச்செயற் திட்டத்திற்கு முக்கியஸ்தராக செயற்பட்ட மத்திய மாகாண ஆளுநர் கௌரவ லலித் யூ கமகே அவர்கள், மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி சமிந்த அதபத்து அவர்கள், இதற்கு பங்களித்த அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் அக்குறணை பிரதேச சபையின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நான் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.