Our Feeds


Wednesday, January 17, 2024

News Editor

இலங்கை சபாநாயகர் – மாலைதீவு சபாநாயகர் சந்திப்பு


 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு சபாநாயகர் மொஹமட் அஸ்லம் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (16) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்தத் தூதுக்குழுவில் மாலைதீவு பாராளுமன்ற உறுப்பினர்களான அலி ஆஸிம், அலி நியாஸ், ஹுசைன் ஹஷீம், மாலைதீவு பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாத்திமா நியூஷா உள்ளிட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவதுடன், இந்த சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டார்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், சார்க் நாடுகளுக்கிடையில் மாலைதீவுடன் இலங்கை மிகவும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகவும், அதனால் விசேடமாக இரு நாடுகளினதும் மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச ரீதியில் எல்லா சந்தர்ப்பங்களிலும் மாலைதீவு இலங்கைக்கு ஆதரவு வழங்கி வருவது தொடர்பில் நன்றியைத் தெரிவித்த சபாநாயகர் அது தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயத்துக்கு அழைப்பு விடுத்தமை குறித்து மாலைதீவு சபாநாயகர் மொஹமட் அஸ்லம் நன்றியைத் தெரிவித்ததுடன், மாலைதீவு மக்களின் கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை வசதிகளை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை விமான சேவை, இலங்கை வங்கி மற்றும் இலங்கையில் முன்னிலை நிறுவனங்கள் மாலைதீவில் வர்த்தகத் துறையில் பங்களிப்பு செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இரு நாட்டுப் பாராளுமன்றங்களுக்கிடையிலும் நெருங்கிய தொடர்புகளை எதிர்காலத்திலும் பேணுவதற்கு எதிர்பார்ப்பதாக மாலைதீவு சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக, இரு நாட்டுப் பாராளுமன்றங்களிலுமுள்ள குழு முறைமை மற்றும் சட்டவாக்க செயன்முறை தொடர்பிலும் இரு தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »