Our Feeds


Wednesday, January 3, 2024

News Editor

மக்கள் மீது விரும்பி வரி விதிக்கவில்லை


 ” இவ்வருடம் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது.” – என்று அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இன்று(03) கொழும்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு கடந்த வருடம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2022 காலப்பகுதியில் இருந்த நிலை தற்போது இல்லை. நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்திய வீடமைப்பு திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றோம். காணி உரிமையும் பேசுபொருளாக இருந்தது. அதனை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இந்திய அரசின் 3 ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்குவோம். இது பற்றி மக்களுக்கு விரைவில் தெளிவுப்படுத்தப்படும்.

மக்கள் மீது விரும்பி வரி விதிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் கட்டாயம் வரி செலுத்தப்பட வேண்டும். மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படாதிருக்க வேண்டுமென்றால் வரி அதிகரிப்பு கட்டாயம் அவசியம். உலக நிலைவரமும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது. கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டதால்தான் பணவீக்கத்தை குறைக்க முடிந்தது. இன்னும் 3, 4 மாதங்களில் சில பொருட்களின் விலைகள் குறையும் என நம்புகின்றோம்.

நீர்க் கட்டணம் தொடர்பான விலை சூத்திரம் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அந்த சூத்திரம் அமையும்.

இவ்வருடம் கட்டாயம் தேர்தல் நடக்கும். ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் அல்லது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயார்.” என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »