ஜனவரி மாத இறுதிக்குள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிட்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளை நிலையம் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்று (07.01.2023) ஞாயிறு காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் மாபெறும் பங்காற்றிவரும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தனக்கு கிடைக்கப்பெற்ற வேண்டுகோள்களை என்னால் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன்.
அந்தவகையில் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தனது உரையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விரைவில் தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இவரின் வேண்டுகோள் இம்மாத இறுதிக்குள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது. என தெரிவித்த அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி திகதி குறித்துள்ளார்.
தன்னை அழைத்து பேசியும் உள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பாக சகல தரப்புகளும் கலந்துரையாடவுள்ளதுடன்,
பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆகையால் இம்மாத இறுதிக்குள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிடைக்கும் இதை இந்த நாட்டு மக்களை காத்து வரும் ஜனாதிபதி, அவரின் வாயால் தொழிலாளர் மக்களுக்கு தெரியப்படுத்துவார் என அமைச்சர் தெரிவித்தார்.
கட்சி பேதம் இன்றி நுவரெலியா மாவட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளை பெயரிட்டு நன்றிகள் தெரிவித்தார்.
அத்துடன் நானயக்கார என்ற எனது பெயர் ஆரம்பத்தில் நாயக்கராக இருந்திருக்ககூடும் ஆகையால் மலையக மக்களுடன் எனக்கு உறவுள்ளது எனவும் தெரிவித்த அவர் எனது அரசியல் ஆரம்பமும் அதன் பயணமும் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் (ஐயா)விடம் இருந்தே ஆரம்பமானது என ஞாபகப்படுத்தினார்.
மேலும் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து வருடம் 200 என தெரிவித்தாலும் இம்மக்கள் சோழர் காலத்திலேயே இலங்கைக்கு வருகை தந்து போராட்டத்துடன் வாழ்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
ஆ.ரமேஸ்.