Our Feeds


Sunday, January 21, 2024

SHAHNI RAMEES

எமது சமூக மாற்றம் எமது கல்வியிலேயே தங்கியுள்ளது - அமைச்சர் ஜீவன்

 

" கல்வியே எம்மை எப்போதும் காக்கும், எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது, எனவே, பிள்ளைகளை தயவுசெய்து பாடசாலைக்கு அனுப்புங்கள், பொருளாதார நெருக்கடி என்பதால் கல்வியை கைவிட்டால் எமக்கு விடிவு பிறக்காது.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.



அத்துடன், மலையக மக்களுக்கு நிச்சயம் காணி உரிமை கிடைக்கும் எனவும், சம்பள பிரச்சினைக்கும் விரைவில் நிரந்தர தீர்வு கிட்டும் எனவும் அமைச்சர் கூறினார்.



ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று (21.01.2024) நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். 



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



“ இன்றைய நாள் மிகவும் சந்தோசமான நாளாகும், தேசிய தைப்பொங்கல் விழாவை எமது மலையக மண்ணில் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு இரவு, பகல் பாராது கடுமையாக உழைத்த எமது அமைப்பாளர்கள், இளைஞர் அணியினர் உட்பட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், எமது அழைப்பையேற்று மலையகத்துக்கு வருகை தந்து எமது மக்களை மகிழ்வித்த தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஸ், சம்யுக்தா, மீனாக்சி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கும் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.



அதேபோல பெருமளவான இளைஞர்கள் வந்துள்ளனர், மக்களும் குவிந்துள்ளனர், அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.



ஏதை செய்தாலும் விமர்சிக்கும் சிலர், வழமைபோல இந்த பொங்கல் விழாவையும் விமர்சிக்கின்றனர், பொங்கல் தான் முடிந்துவிட்டதே, எதற்கு தற்போது பொங்கல் எனவும் கேட்கின்றனர், தூங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் தூங்குபவர் போல் நடிப்பவர்களை எழுப்பமுடியாது.



தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், ஆம், காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் வீட்டு திட்டத்தை சிலர் அரசியல் ரீதியாக விமர்சிக்கின்றனர், என்னை பொறுத்தவரை 10 ஆயிரம் வீடுகளைவிட ஒரு இலட்சத்து 76 ஆயிரம் குடும்பங்களுக்கான காணி உரிமையே பிரதான இலக்கு, அதனை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.



மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியும் நிச்சயம் நிறைவேற்றப்படும். சம்பளப் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு கிட்டும்.



அதேவேளை, இங்குவருகைதந்துள்ள பெற்றோர்களிடமும் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றேன், கடும் கஷ்டம் வந்தாலும் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தவிட வேண்டாம், அவர்களை படிக்க வையுங்கள், தீர்வை தேடுகின்றோம், அந்த தீர்வு கல்வியில் தங்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அது புரியாவிட்டால் விடிவு இல்லை.” – என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »