உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வரி சேகரிப்பு செயற்பாடுகளை விஸ்தரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் நேரடி வரி வீதம் 40% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
நிதியமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற வெட் விழிப்புணர்வு கருத்தரங்கில், கலந்து கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அரச அதிகாரிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் கருத்தரங்கொன்று ஜனாதிபதி தொழிற்சங்கங்கள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரியவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய,
எத்தகைய பொருளாதார நிலையில் இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் இந்த காலகட்டம் மிகவும் கஷ்டமானது என்று சொல்ல வேண்டும். ஒவ்வொருவரினதும் வருமானம் குறைந்து, செலவுகள் அதிகரித்துள்ளதால், சிரமங்கள் எழுந்துள்ளன. நாடு எதிர்நோக்கும் பிரச்சினையை புரிந்து கொண்டு அரசாங்கம் இதற்காக முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். அதற்கான வரித் தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் முயற்யெடுத்து வருகிறது. இதுவரை 20% ஆக இருந்த நேரடி வரி விகிதத்தை படிப்படியாக 30% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி வரியை மேலும் 40% ஆக மேலும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் மறைமுக வரிகளின் சதவீதத்தை குறைக்கும் திறன் அரசுக்கு உள்ளது.
அத்துடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல் பாவனையாளர்களுக்கு போலி பற்றுச்சீட்டுகளை வழங்கி, முறையற்ற விதத்தில் இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாகத் தடுக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த நிதியமைச்சின் அரச நிதித் திணைக்கள வரி தொடர்பான ஆலோசகர் தனுஜா பெரேரா குறிப்பிடுகையில்,
வர்த்தகர்கள் ஒவ்வொரு மாதமும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வெட் வரி செலுத்த வேண்டும். இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அறவிடப்படும் வெட் தொகையை பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வர்த்தகர்கள் வழங்க வேண்டும்.
வசூலிக்கப்படும் வெட் வரியானது மேற்படி திணைக்களத்திற்கு வழங்காவிட்டால் அத்தகையவர்களுக்கு நபர்களுக்கு எதிராக வெட் சட்டத்தின் பிரகாரம் நிதியமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்கும். வெட் வசூலிக்கத் தகுதியான வர்த்தக நிலையங்களை அடையாளம் காண்பதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்த வேண்டும். வெட் வரியை அறவிட்டு விநியோகிக்கும் பற்றுச் சீட்டுக்கள் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் தயாரித்த மாதிரி வடிவத்தின் படி நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும், வெட் வரிக்கு பதிவு செய்யாமல் நுகர்வோரிடம் பணம் வசூலிக்கும் மோசடி வர்த்தகர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும். இதுபோன்ற தவறுகளைச் செய்பவர்களுக்கு எதிராக அபராதம் வசூலிக்கவும் , பாவனையாளர்களிடம் இருந்து அறவிட்ட வெட் வரியை அரசிற்கு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தொழிற்சங்கங்கள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உரையாற்றுகையில்,
இந்த வெட் திருத்தம் இன்றைய சமூகத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக சமர்ப்பித்துள்ளார். அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இந்த ஆண்டு தொடர்பான பொருளாதார ஆவணமாகும். மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும் முன்வைக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம் பற்றி சரியான கருத்தாடல் இடம்பெறாவிட்டால் அதன் மூலம் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளை யதார்த்தமாக்க முடியாது. அதனால்தான் வெட் குறித்த இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
இந்த வெட் திருத்தம் பற்றி பல தவறான கருத்துக்கள் சமூகத்தில் உலாவுகின்றன. 15% லிருந்து 18% ஆக வெட் வரி உயரும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே உள்ள பொருட்களுக்கு வெட் வரி 3% இனால் அதிகரித்துள்ளது. ஆனால் 0% முதல் 18% வரை அதிகரித்த சில பொருட்களும் உள்ளன. விதிக்கப்பட்ட வரி 18% ஆக இருந்தாலும், வரிச் சீராக்கல் காரணமாக, அதைவிட குறைவான சதவீதத்தினால் வெட் வரி அதிகரிக்கும் பொருட்களும் உள்ளன. எனவே, இந்த வெட் குறித்து சமூகத்தில் சரியான கருத்தாடல் நடைபெற வேண்டியது அவசியம்.“ என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அலுவலக அரச வருவாய்ப் பிரிவு பணிப்பாளர் கே.கே.ஐ. எரந்த
அரசாங்கத்தால் வெட் வரி முறையாக வசூலிக்கப்படுவதில்லை என்பதை அவதானித்துள்ளோம். பொதுவாக, பெறுமதி சேர் வரியை முறையாக வசூலித்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% பொருளாதாரத்தில் சேர்க்க முடியும். ஆனால் தற்போது, 2% சதவீதமான வரியே பொருளாதாரத்தில் சேர்க்கப்படுகிறது. இது தொடர்பில் ஆராய்ந்ததில் மூன்று முக்கிய வரி குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வர்த்தகர்கள் வரி வசூல் செய்கிற போதும் அதை அரசாங்கத்திடம் கையளிப்பதில்லை. இரண்டாவது குறைபாடு, அதிகாரிகளின் முறைகேடு களால் வரி வருமானம் இழக்கப்படுகிறது. வரி விலக்குகள் மூலமாகவும் வரி தொடர்பான குறைபாடுகள் ஏற்படுகிறன. இந்த வரி தொடர்பான ஓட்டைகளை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் ஊடாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும்.
2019 முதல் ஆறு மாத காலத்தில், வெட் வரி 15% ஆக இருந்தது. 2020இல் இது 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதே விகிதத்தில் இருந்தது. வெட் வரி 8% குறைக்கப்பட்டதால் 2020 இல் பொருட்களின் விலை குறையவில்லை. இந்த மூன்றாண்டுகளில் சரிந்த பொருளாதாரத்தை 15% வீதமாக வெட் வரியை வைத்துக்கொண்டு உயர்த்த முடியாது. எனவே, பொருளாதாரத்தை உயர்த்த வெட் வரியை 18% ஆக உயர்த்த வேண்டும்.
தற்போது வெட் வரி வசூலுக்காக பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் பதின்மூன்றாயிரம் ஆக உள்ளது, எதிர்காலத்தில் அதை ஐம்பதாயிரமாக உயர்த்துவது அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது“என்றார்.