எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அதில் நிச்சயமாக போட்டியிடுவேன் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"மவ்பிம ஜனதா கட்சியின் அபிலாஷை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் இலக்காகக் கொண்ட வேலைத்திட்டம் அல்ல. இந்தக் கட்சி இலங்கையின் வரலாற்றுத் தேவைக்காகப் பிறந்த ஒரு சக்தியாகும்.
இந்தக் கட்சி மிகவும் தத்துவார்த்தமானதும் தர்க்கரீதியானதுமான வேலைத்திட்டமும் பொருத்தமான அணியும் கொண்டது. குறிப்பாக இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அடங்கிய ஒரு ஐக்கிய அமைப்பு. எங்களிடம் மிகப் பெரிய நீண்ட இலக்கு உள்ளது.
இந்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் யார் என்று கேட்டால், குறுகிய அரசியல் கோணத்தில் இன்னமும் கேட்கப்படும் கேள்வியாகவே நான் கருதுகிறேன். அது தேவை என்றால், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன் என்று நேர்மையாகச் சொல்ல முடியும்.
ஆனால் இது திலித் ஜயவீரவின் ஜனாதிபதி பதவிக்கான தனிப்பட்ட கனவில் இருந்து உருவாக்கப்பட்ட குறுகிய கால வேலைத்திட்டம் அல்ல. நிச்சயமாக ஜனாதிபதி தேர்தல் நடந்தால் அந்த தேர்தலில் போட்டியிடுவோம். அதில் வெற்றிப்பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வோம்" என அவர் தெரிவித்தார்.