அரச அடக்குமுறைகளை செயல்படுத்தி, நாட்டின் சாதாரண மக்களின் அரசியல் உரிமைகளை பறித்து, அடக்குமுறைகளை மேற்கொள்ளும் பொருட்டே தேர்தல் வருடமொன்றில் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்த சட்டத்தின் ஊடாக இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதனூடாக அரசியல் அதிகார பீடத்தாலயே பயங்கரவாதி என்பவர் யார்? தேசபற்றாளர் என்பவர் யார் என்பதை தீர்மானிக்க முடியும். பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்க முடியுமான உரிமை இங்கு முற்றாக மீறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்நிலை காப்பு சட்டம் குறித்து ஊடகங்களுக்கு விசேட கருத்தொன்றை விடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நியாயமான ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பலமுறை தமது கருத்துக்களை வெளிப்படுத்தியது.பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் இவ்வாறான ஒழுங்குமுறைப்படுத்தலை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், இதற்கு குறிப்பிட்ட கால அவகாசமே வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரையும் பெயரளவில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசாங்கம் தான் விரும்பியதை நிறைவேற்றியுள்ளது. பொது மக்களின் சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமையும், சுயாதீன உரிமையும் இங்கு மீறப்பட்டுள்ளது .
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் அமைக்கும் அரசாங்கத்தில் இந்தச் சட்டத்தை நீக்குவது முதற் கடமையாகும். பின்னர், நாட்டிற்கும் மக்களுக்கும் நலனளிக்கும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும், மனித சுதந்திரத்திற்கு இடமளிக்கும், உண்மைகளின் அடிப்படையில் தகவல்களை வழங்குவதை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கு அமைய யதார்த்தமான,நம்பகமான,நடைமுறை மற்றும் முற்போக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் மூலம் அரசாங்கம் தற்காலிக ஆறுதல் பெறலாம்.இந்த ஆறுதல் சில மாதங்களுக்கு மட்டுமே தங்கும்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களை ஒடுக்கும் இந்த சட்டமூலத்தை நீக்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.